போதைப் பொருள் வழக்கு.. நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த நடிகை சஞ்சனா கல்ராணி என்ன செய்கிறார்?
பெங்களூரு: ஜாமீனில் வெளிவந்துள்ள நடிகை சஞ்சனா கல்ராணி, வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக அவருக்கு வேண்டியவர்கள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதை விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைப்பு
இந்த வழக்கில் கன்னட நடிகை ராகிணி திவேதி செப்டம்பர் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரை அடுத்து, நடிகை சஞ்சனா கல்ராணி செப்டம்பர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர்கள் நண்பர்கள் உட்பட 14 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றம்
நடிகை ராகிணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சஞ்சனா கல்ராணி சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மருத்துவ காரணங்களின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்ட வேண்டும் என்று கேட்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனை
மனுவை விசாரித்த நீதிமன்றம், சஞ்சனாவுக்கு வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையை 10-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

3 மாதத்துக்குப் பின்
பின்னர் விசாரித்த நீதிமன்றம் நடிகை சஞ்சனா கல்ராணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மாதம் ஒரு நாள் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து 3 மாதத்துக்குப் பிறகு சஞ்சனாவுக்கு ஜாமீன் கிடைத்தது.

வீட்டில் ஓய்வு
ஜாமீனில் வெளிவந்த நடிகை சஞ்சனா கல்ராணி, என்ன செய்கிறார் என்பது பற்றி அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து இருப்பதாவது: சஞ்சனா வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவர், தனது நெருங்கிய உறவினர்களை சந்தித்து நேரத்தை செலவிடுகிறார்.

தவிர்க்க வேண்டும்
வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அவர் மீடியாவிடம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் அவர் அதுபற்றி யாரிடமும் பேச விரும்பவில்லை. மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்றும் அவர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











