ரஜினி, கமல் படம் ரேஞ்சுக்கு பில்டப் தரும் ‘தமிழ்படம் 2’!
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடித்துள்ள தமிழ்படம் 2 நாளை ரிலீசாக இருக்கிறது.
சென்னை: சிவாவின் தமிழ்படம் 2 நாளை ரிலீசாக இருக்கிறது. ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களைப் போல் காலை 5 மணிக்கே முதல் காட்சியை திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடித்து கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தமிழ்படம்'. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் 2ம் பாகம் நாளை ரிலீசாக இருக்கிறது. இப்படத்தையும் சி.எஸ். அமுதனே இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சிவாவுடன் இணைந்து திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில், ஒரு குத்துப் பாடலுக்கு நடிகை கஸ்தூரி நடனம் ஆடியுள்ளார்.

அரசியல்:
முதல் பாகத்தில் தமிழ் சினிமாவைக் கலாய்த்த படக்குழு, இரண்டாம் பாகத்தில் அரசியல் தளத்தையும் விட்டு வைக்கவில்லை. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பட போஸ்டர்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பால், ரசிகர்கள் தமிழ்படம் 2 ரிலீசை ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

5 மணிக்கே முதல் காட்சி:
எனவே, ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க நாளை காலை 5 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படுகிறது. வழக்கமாக ரஜினி, கமல் போன்ற முன்னணி நாயகர்களின் படங்களுக்கு மட்டுமே இவ்வாறு அதிகாலையில் காட்சி திரையிடுவர்.

ஆர்வம்:
தமிழ்படம் வெற்றிக்குப் பிறகு சிவா சிங்கிள் ஹீரோவாக நடித்து, சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தமிழில் படங்கள் வெற்றியடையவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவாவின் இந்தப் படத்தை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர்.

கலாய்ப்பு:
இதற்கு முக்கியக் காரணம் படக்குழு இணையத்தில் வெளியிட்டு வரும் விதவிதமான போஸ்டர்களைச் சொல்லலாம். நாட்டு நடப்பு, அரசியல் தலைவர்கள், முன்னணி நடிகர்கள் என உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை எல்லோரையும் தயவு தாட்சன்யம் பார்க்காமல் கலாய்த்துள்ளனர். இதுவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிற முக்கியக் காரணம் ஆகும்.


Click it and Unblock the Notifications











