P Vasu: பி வாசு பிறந்தநாள் ஸ்பெஷலாக ரிலீஸாகியிருக்க வேண்டிய சந்திரமுகி 2... கடைசில இப்படி ஆயிடுச்சே!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பி வாசு. பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பி வாசு, இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனையடுத்து பி வாசுவிற்கு திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் அவரது பிறந்தநாளில் சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகாமல் போனது குறித்தும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பி வாசுவின் 69வது பிறந்தநாள்: 1981ம் ஆண்டு வெளியான பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் மூலம் இயக்குநரானவர் பி வாசு. முதல் திரைப்படத்திலேயே கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்த பி வாசு, இப்போதும் படங்களை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் படங்களை இயக்கியுள்ள பி வாசு, தயாரிப்பாளர்களின் இயக்குநர் என பெயர் எடுத்தவர். மினிமம் பட்ஜெட்டில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுப்பதில் கை தேர்ந்தவர்.
பி வாசு இயக்கத்தில் ரஜினியின் பணக்காரன், மன்னன், சத்யராஜ்ஜின் நடிகன், வால்டர் வெற்றிவேல், பிரபுவின் சின்ன தம்பி, விஜயகாந்த் நடித்த சேதுபதி ஐபிஎஸ் போன்ற திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. முக்கியமாக பி வாசு - ரஜினி கூட்டணியும், பி வாசு - சத்யராஜ் காம்போவும் தவிர்க்கவே முடியாதது. அதேபோல், அவரது இயக்கத்தில் கவுண்டமணி அடித்த காமெடி லூட்டிகள் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடும் பி வாசுவிற்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக இன்று அவர் இயக்கிய சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகிருக்க வேண்டும். ஆனால், கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் இன்று வெளியாகவிருந்த சந்திரமுகி 2, வரும் 28ம் தேதி ரிலீஸாகவுள்ளது. பி வாசுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த பலரும், சந்திரமுகி 2 இன்று வெளியாகாதது ஏமாற்றமே எனக் கூறியுள்ளனர்.
ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ள சந்திரமுகி 2 ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது. ரஜினி நடிப்பில் சூப்பர் ஹிட்டான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ள இந்தப் படத்தையும் பி வாசுவே இயக்கியுள்ளார். மேலும் வடிவேலு, கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பி வாசுவின் ட்ரேட் மார்க்கான காமெடி, சந்திரமுகி 2ம் பாகத்திலும் ரசிகர்களை கலங்கடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகவே சந்திரமுகி 2 படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் பி வாசுவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக, சந்திரமுகி 2வில் இருந்து ஏதாவது அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











