மகன்கள் ஆளாகும் வரை அப்பாக்கள் கஷ்டம் தெரியாது!- பி வாசு

By Shankar

மகன் ஆளாகும் வரை அப்பாக்களின் கஷ்டம் அவர்களுக்குத் தெரிவதில்லை என்று இயக்குநர் பி வாசு கூறினார்.

பி வாசு மகன் சக்திவேல் நாயகனாக நடித்துள்ள தற்காப்பு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது.

விழாவில் இயக்குநர் பி வாசு கூறுகையில், "கடந்த 30 ஆண்டுகளாக நான் சினிமா விழாக்களில் கலந்து கொண்டு வருகிறேன். இன்று எனக்கு பிறந்தநாளும் கூட. என் படக்குழுவினர் தொழில்நுட்பக் குழுவினரை விட்டு விட்டு நான் கலந்து கொள்ளும் முதல் விழா இதுதான். இங்கே என் மகனுக்காக வந்துள்ளேன்.

P Vasu releases Tharkappu audio

ஒரு பெண்ணுக்கு பிறந்த வீடு புகுந்த விடு என்று இரு வாழ்க்கை இருக்கும் என்பார்கள். ஆண்களுக்கும் இரண்டு வாழ்க்கை இருக்கும். ஒன்று நமது வாழ்க்கை இன்னொன்று பிள்ளைகளால் வரும் வாழ்க்கை. மகன் ஆளாகும்வரை அப்பாக்கள் படும் கஷ்டம் எல்லாருக்கும் புரியாது. எங்கப்பா என்னை ஆளாக்கப் பட்டது இப்போது ஒரு தகப்பனாக எனக்குப் புரிகிறது.

எல்லா இயக்குநரும் என்னிடம் கதை சொல்ல வேண்டுமே என்று நினைத்து சக்தியிடம் கதை சொல்ல தயங்குகிறார்கள்.ஆனால் நான் சக்திக்காக கதை கேட்பதில்லை. சக்தி கேட்கச் சொன்னால் மட்டும்தான் கேட்பேன். நான் வரிவிலக்குக் குழு, தணிக்கைக் குழுவில் எல்லாம் உறுப்பினராக இருக்கிறேன்.

பார்க்கிற படங்களில் சிலர் நல்ல கதையை சரியாகச் சொல்லாத போது சில காட்சிகளில் கோட்டை விட்டதை எல்லாம் பார்த்தால் வருத்தப் படுவேன்.

50 படங்கள் இயக்கிவிட்டேன். நடிப்பது சிரமம் என்பது எனக்குத் தெரியும். என்னை விஜயகாந்தும் மகராஜனும் நடிக்கக் கூப்பிட்டார்கள். நான் எவ்வளவோ பேருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து இருக்கிறேன். ஆனால் முதல்நாள் படப்பிடிப்பில் நடிக்க பதற்றமாக இருந்தது எனக்குள் யாரோ புகுந்து விட்டமாதிரி பதட்டமாக இருந்தது. அப்போது எல்லா கண்களும் சுற்றிலும் பார்க்க அமைதியான சூழலில் நடிப்பது எவ்வளவு சிரமம் என்று புரிந்தது.

சக்தியைப் பொறுத்தவரை அவனை நான் பாராட்டவில்லை என்று தன் அம்மாவிடம் சொல்வானாம், அப்பா பாராட்டவில்லையே என்று குறை படுவானாம்.

இந்தப்படம் 'தற்காப்பு' திருப்தியாக வந்து இருக்கிறது. எனக்கு பிடித்தது. இனி சக்திக்கு நல்ல நேரம் வரும். இனி மற்றவர்கள் அவனைப் பாராட்டுவார்கள். நான் என்றும் சொல்வேன் மக்கள் கதாநாயகன் யாரென்று பார்ப்பதில்லை. கதையைத்தான் பார்க்கிறார்கள். அதற்குத்தான் இயக்குநர் தேவை. இப்படம் நல்ல கதையுடன் வந்திருக்கிறது," என்று வாழ்த்தினார்.

சக்திவேல் வாசு

சக்திவேல் வாசு பேசும் போது, "இந்தப் படத்துக்கு நிறைய பாசிடிவ் எனர்ஜி இருக்கிறது. காரணம் நாங்கள் எல்லாருமே நல்லவர்கள். சமுத்திரக்கனி என்றாலே பாசிடிவ் எனர்ஜிதான் அது பெரிய பலம். என் அப்பா எனக்காகப் போய் வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குநர் மிஷ்கின் சார்தான். இங்கே அவர் வந்திருக்கிறார். ஜனநாதன் சார் வந்திருக்கிறார். கார்த்தி அண்ணா வந்து இருக்கிறார். அவர் சிறுத்தையில் நடித்த போலீஸ் கேரக்டர் எனக்குப் பிடிக்கும். காரணம் சிக்ஸ் பேக்ஸ் இருக்காது. அதே போல தல அஜீத்தும் நடிக்கும் யதார்த்தமான போலீஸ் கேரக்டர் எனக்குப் பிடிக்கும். யதார்த்தமான போலீஸ் தொப்பையுடன்தான் வருவார். தொப்பை இல்லை என்றால் தமிழ்நாடு போலீசே கிடையாது.

அப்பாவுக்கும் எனக்கும் நெருக்கம் குறைவு. அப்பா பேச மாட்டாரா என்று நினைத்து ஏங்கி இருக்கிறேன். அப்பா எப்போதும் சினிமா சினிமா என்று பரபரப்பாக இருப்பார். ஆனால் அதெல்லாம் குடும்பத்திற்காக என்று எனக்கு மனைவி மகன் என்று வந்த பிறகுதான் இப்போது புரிகிறது. அப்பா மகன் மீது வைத்திருக்கும் பாசம் வெளியில் தெரியாது. என் அப்பா சந்தோஷ் சுப்பிரமணியம் பிரகாஷ்ராஜ் மாதிரி. நான் ஜெயம்ரவி மாதிரி. அப்படித்தான் பலநாள் நினைத்திருந்தேன். அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது. என் குடும்பம் மனைவி மகன் என்று வந்த பிறகுதான் புரிகிறது.

இந்தப் படத்துக்காக நாங்கள் வியர்வை தான் சிந்தினோம். ஆனால் தொழில்நுட்பக் கலைஞர்கள் தொழிலாளர்கள் எல்லாமே ரத்தம் சிந்தினார்கள். ஒருவருக்கு 6 வது மாடி யிலிருந்து விழுந்து மண்டை உடைந்து விட்டது. படப்பிடிப்பு மறுநாள் நிறுத்தப்பட்டுவிட்டது.

மருத்துவமனை போய் பார்த்தபோது எப்படி இருக்கிறீர்கள் என்றேன் 'நான் நல்லாருக்கேன். படப்பிடிப்பு எப்படி போய்க் கொண்டு இருக்கிறது?' என்றார். எனக்கு அழுகையே வந்துவிட்டது, தொழிலாளர்கள் அவர்கள் இல்லாமல் சினிமா இல்லை," என்றார்.

கார்த்தி

நடிகர் கார்த்தி பேசும்போது, "படத்தின் பெயர் 'தற்காப்பு' . போஸ்டரைப் பார்த்தாலே 'தற்காப்பு' நல்லபடம் எனறு தெரிகிறது. நம்பிக்கை வருகிறது. லிங்குசாமி சார் சொல்வார் நல்லபடமா இல்லையா என்பது போஸ்டரிலேயே தெரியும் என்று.

எனக்கும் என் அப்பா பற்றிய நினைவு வருகிறது. அப்போது அப்பா சொல்வார் அப்பாவிடமும் குருவிடமும் பாராட்டை எதிர்பார்க்கக் கூடாது அப்படி ஒரு பாராட்டு வரவே கூடாது. பாராட்டு வராத வரைதான் வேலை செய்வோம் என்று.

எனக்கு சக்தியை நன்றாகத் தெரியும். ஸ்டண்ட் க்ளாஸில் பார்ப்பேன். நானும் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. ஆனால் முயன்றால் முடியும்.

எதுவும்10 நாள் வரவில்லை என்றால், முயன்றால்11 வது நாள் வரும். முயற்சியை மட்டும் விடக்கூடாது. உடனே வெற்றிவராது. ஆனால் முயற்சி கவனிக்கப்படும் இதைத்தான் நானும் செய்கிறேன். சக்திக்கும் சொல்கிறேன், " என்றார்.

விழாவில் இயக்குநர் பி. வாசுவுக்கு கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி ஜனநாதன், சமுத்திரக்கனி , ஜி.என்.ஆர். குமரவேலன்,கிருஷ்ணா, நடிகர் வத்சன் சக்கரவர்த்தி, நடிகை வைஷாலி, தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், 'ஆஸ்ட்ரோ' என்.சி. ராஜாமணி, கமலா திரையரங்க உரிமையாளர் கணேஷ், ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் ஆனந்த், இசையமைப்பாளர் எ.ஏச் ஃபைசல், பாடல்கள் எழுதிய மோகன்ராஜ், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள். முன்னதாக கினெடாஸ் கோப் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ள டாக்டர் எஸ்.செல்வமுத்து, என். மஞ்சுநாத் அனைவரையும் வரவேற்றனர். 'தற்காப்பு' பட இயக்குநர் ஆர்.பி.ரவி நன்றி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X