ஆட்சிக்கு வந்து 2 வாரம் தான் ஆகுதுனு TVK சொல்ல கூடாது.. கோவை சிறுமி விவகாரத்தில் பா.ரஞ்சித் விளாசல்
சென்னை: மொத்த தமிழ்நாடுமே தற்போது மிகவும் கவலையுடன் விவாதித்துக் கொண்டு இருப்பது கோவையைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொ*லை செய்யப்பட்டது தான். பலரும் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித் மிகவும் காட்டமான முறையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசை விமர்சித்துள்ளார்.
அவரது பதிவில், " கோவை பகுதிக்குட்பட்ட சூலூரில் 10 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி இருக்கிறது. சம்பந்தப்பட்ட குடும்பத்தை எந்த வகையிலும் ஆற்றுப்படுத்த முடியாத துயரம் இது.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்; உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்கிற உத்தரவாதமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அரசின் இந்த அறிவிப்போடு இக்கொடூரத்தை கடந்து போக முடியாது.
இரண்டு வாரம் தானே: கடந்த தேர்தலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முக்கிய பேசுபொருளானது. அவை ஆட்சி மாற்றத்தில் சரி செய்யப்படும் என்கிற உத்தரவாதமும் கொடுக்கப்பட்டது. தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வாரங்களே ஆகி இருந்தாலும், இத்தகைய குற்றங்களுக்கு முன்னே அதை ஒரு காரணமாக இனி ஒருபோதும் முன்வைக்க முடியாது. குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டும். சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இதை எல்லா விதங்களிலும் அணுகி, அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

விளாசல்: இந்த மனிதாபிமானமற்ற கொடூரத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் துயரத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, பாலியல் வன்கொடுமை குறித்து எல்லாவற்றுக்கும் அப்போதைய அரசையும் முதலமைச்சரையும் காரணம் சொல்லி விமர்சித்திருந்தார். இப்படி இருக்கையில் தற்போது விஜய் முதலமைச்சராக இருக்கும் போதும் இது போன்ற குற்றங்கள் தொடரும் போது, திமுகவினர் மிகவும் காட்டமாக தவெகவினரை விமர்சித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications