சிவகார்த்திகேயனை தான் விளாசினாரா பா. ரஞ்சித்?.. மாரி செல்வராஜ் பட விழா பேச்சு.. புதிய சர்ச்சை!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வாழை' திரைப்படம் இந்த வாரம் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாகிறது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி படத்துடன் போட்டியாக வாழை வெளியாகிறது. வாழை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித் கர்ணன் மற்றும் மாமன்னன் படங்கள் மட்டும் ஏன் பிடிக்கவில்லை என சொல்றீங்க, அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை எனக் கேட்டிருந்தார்.
பரியேறும் பெருமாள் படத்தையும் வாழை படத்தையும் பாராட்டும் நபர்கள் கர்ணன் பிடிக்கவில்லை என்றும் மாமன்னன் பிடிக்கவில்லை என பேசுவது ஏன் என பொங்கியிருந்தார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனை தான் பா. ரஞ்சித் தாக்கி பேசியுள்ளார் என்று புதிய பிரச்சனை ஒன்று சமூக வலைதளங்களில் கிளம்பி உள்ளன. அதற்கு காரணமாக சிவகார்த்திகேயன் பேசும் ஒரு வீடியோவையும் ஷேர் செய்து வருகின்றனர்.
மாரி செல்வராஜின் வாழ்க்கை: பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் பொன்வேல், ராகுல், கலையரசன், நிகிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமி நடித்துள்ள வாழை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி திரைக்கு வருகிறது. மாரி செல்வராஜின் இளம் வயது வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கர்ணன், மாமன்னன் ஏன் பிடிக்கவில்லை?: பரியேறும் பெருமாள் படம் பிடிக்கும், அதன் பின்னர் வாழை படம் நல்லா இருக்குன்னு சிலர் சொல்றாங்க, அவங்களை பார்த்துக் கேட்கிறேன், அப்போ கர்ணன், மாமன்னன் படங்கள் என்ன மொக்கைப் படங்களா? அந்த இரண்டு படங்களிலும் ஹீரோ திருப்பி அடிக்கிறான். அதனால், பிடிக்கவில்லை என்று சொல்வதெல்லாம் ரொம்ப மோசம். இன்னும் எத்தனை வருஷத்துக்கு இப்படித்தான் படம் எடுக்கணும்னு சொல்வீங்க, அந்த சூழல், அவனோட நிலைமை, அவனை அப்படி திருப்பி அடிக்கத் தூண்டும் சமூகம் என்பதை எல்லாம் புரிந்துக் கொள்ள மறுப்பது சரியில்லை என பேசியிருந்தார்.
மணிரத்னத்தை சீண்டினாரா?: வாழை படத்தை பார்த்து விட்டு மாரி செல்வராஜை மணிரத்னம் பாராட்டிய நிலையில், ஒரு பெரிய இயக்குநர் தன்னுடைய படத்தை பார்த்து விட்டார். ஆனால், அது பற்றி அவர் எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லை. ஆனால், அவரையும் அழைத்து படம் பார்க்க வைத்து பேச வைத்த மாரி நீ சூப்பர் டா என ரஞ்சித் பேசிய நிலையில், மணிரத்னத்தை தான் பா. ரஞ்சித் சீண்டினார் எனக் கூறினர்.
சிவகார்த்திகேயனுக்கு பதிலடி: மேலும், சிவகார்த்திகேயன் வாழை படத்தை பார்த்து விட்டு பாராட்டி பேசும் போது, தனக்கு பரியேறும் பெருமாள் ரொம்ப பிடிச்சு இருந்தது. அதன் பின்னர், வாழை ரொம்ப பிடிச்சிருக்கு என பேசியிருந்தார். அதை பார்த்து விட்டுத்தான் சிவகார்த்திகேயனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் பா. ரஞ்சித் பேசியுள்ளார் என சோஷியல் மீடியாவில் புது பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது. விமர்சனங்களை ஏற்க பா. ரஞ்சித்துக்கு மனமில்லையா? என்கிற கேள்விகளும் அவருக்கு எதிராக கிளம்பியுள்ளது. எந்தவொரு படத்தையும் பிடிக்கிறது என்றும் பிடிக்கவில்லை என சொல்ல ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது என்று ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கிளாஷ் தான் காரணமா?: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத்ராஜ் இயக்கிய கொட்டுக்காளி படத்துடன் வாழை படம் இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், இரண்டு படங்களுக்கு இடையேயான கிளாஷ் தான் பா. ரஞ்சித் அப்படி பேசக் காரணமா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











