தமிழ்நாடு, இந்திய அளவில் அரசு விருதுகள்.. நேர்மையாக செயல்படுகின்றனவா?.. பா. இரஞ்சித் கேள்வி
சென்னை: 2016ஆம் ஆண்டு 2022ஆம் ஆண்டு வரைக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், 2014ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரைக்கான சின்னத்திரை விருதுகள், 2015 - 2026ஆம் கல்வியாண்டு முதல் 2021 - 2022ஆம் கல்வி ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இயக்குநர் பா.இரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் எழுப்பியிருக்கும் கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் திரைப்பட துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விருதுகள் கொடுக்கப்பட்டு கௌரவிப்பது வழக்கம். திரைப்பட துறை மாதிரியே சின்னத்திரையில் சிறந்த கலைஞர்களுக்கான விருதுகளும் வழங்கப்படும். அந்தவகையில் 2016 முதல் 2022ஆம் ஆண்டு வரையில் சிறந்து விளங்கிய தமிழ் திரை கலைஞர்களுக்கான விருது பட்டியலை நேற்று தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில் ஏராளமானோர் விருதுகளை பெற்றிருக்கிறார்கள்.

சிறந்த நடிகர்களுக்கான விருது: அதன்படி 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக விஜய் சேதுபதியும் (புரியாத புதிர்), சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷும் (பாம்பு சட்டை), 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக கார்த்தியும் (தீரன் அதிகாரம் ஒன்று), சிறந்த நடிகையாக நயன்தாராவும் (அறம்), 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக தனுஷும் (வடசென்னை), சிறந்த நடிகையாக ஜோதிகாவும் (செக்கச்சிவந்த வானம்), 2019ஆம் ஆண்டு சிறந்த நடிகராக பார்த்திபனும் (ஒத்த செருப்பு), சிறந்த நடிகையாக மஞ்சு வாரியரும் (அசுரன்), 2020ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக சூர்யாவும் (சூரரைப் போற்று), சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளியும் (சூரரைப் போற்று), 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக ஆர்யாவும் (சார்பட்டா பரம்பரை), சிறந்த நடிகையாக லிஜோவுக்கும் (ஜெய் பீம், 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக விக்ரம் பிரபுவும் (டாணாக்காரன்), சிறந்த நடிகையாக சாய் பல்லவியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
சிறந்த படங்கள்: அதேபோல் சிறந்த படமாக 2016ஆம் ஆண்டில் மாநாகரம் முதல் பரிசையும், புரியாத புதிர் இரண்டாவது பரிசையும், மாவீரன் கிட்டு மூன்றாவது பரிசையும் பெற்றிருக்கின்றன. 2017ஆம் ஆண்டுக்கான விருதை அறம், 2018ஆம் ஆண்டுக்கான விருதை பரியேறும் பெருமாள், 2019ஆம் ஆண்டுக்கான விருதை அசுரன், 2020ஆம் ஆண்டுக்கான கூழாங்கல், 2021ஆம் ஆண்டுக்கான விருதை ஜெய் பீம், 2022அம் ஆண்டுக்கான விருதை கார்கியும் பெற்றிருக்கின்றன.
சிறந்த இயக்குநர்கள்: மேலும் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த இயக்குநர் விருதை லோகேஷ் கனகராஜ், 2017ஆம் ஆண்டுக்கான விருதை புஷ்கர் காயத்ரி, 2018ஆம் ஆண்டுக்கான விருதை மாரி செல்வரஜ், 2019ஆம் ஆண்டுக்கான விருதை பார்த்திபன், 2020ஆம் ஆண்டுக்கான விருதை சுதா கொங்கரா, 2021ஆம் ஆண்டுக்கான விருதை ஞானவேல், 2022ஆம் ஆண்டுக்கான விருதை கௌதம் ராமச்சந்திரன் ஆகியோர் பெறவிருக்கிறார்கள். இந்த விருதுகள் எல்லாம் பிப்ரவரி 13ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் வழங்கப்படவிருக்கின்றன.
பா.இரஞ்சித் ட்வீட்: இதனையடுத்து விருதுகளை வென்ற கலைஞர்கள் தமிழ்நாடு அரசுக்கு தங்களது நன்றியை தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் இயக்குநர் பா.இரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?" என்று கேள்வியை முன்வைத்திருக்கிறார். விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில் இரஞ்சித்தின் இந்தக் கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











