Thangalaan Update - உலக அளவில் தங்கலான் கொண்டாடப்படும் - பா.இரஞ்சித் கொடுத்த அப்டேட்
சென்னை: Thangalaan Update (தங்கலான் அப்டேட்) தங்கலான் படத்தின் ஷூட்டிங் இன்னும் 20 நாள்கள்தான் இருக்கிறது எனவும், இந்தப் படம் நிச்சயம் உலக அளவில் கொண்டாடப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.
பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அதனையடுத்து அவர் விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர்.
தங்கலான் மேக்கிங்: சூழல் இப்படி இருக்க படத்தின் ஹீரோ சியான் விக்ரம் தனது 57ஆவது பிறந்தநாளை கடந்த மாதம் கொண்டாடினார். அதனையொட்டி தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை பா.இரஞ்சித் வெளியிட்டார். அதனைப் பார்த்த ஒட்டுமொத்த தமிழ் திரையுலகும் ஆச்சரியத்தில் வாய் அடைத்து போயிருக்கிறது. அதை பார்த்த பலரும் நிச்சயம் இந்தப் படம் தமிழின் பெருமைமிகு படமாக இருக்கும் என ஆரூடம் கூறிவருகின்றனர்.

விக்ரமுக்கு கண்டிப்பாக ஹிட்: விக்ரம் சமீபகாலமாக ஹிட்டுக்கு திணறிக்கொண்டிருக்கிறார். சிறந்த நடிகர் என்ற பெயரை எடுத்தாலும் அவர் நடிக்கும் படங்கள் தொடர் தோல்விகளையே சந்தித்துவருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் அவர் பா.இரஞ்சித்துடன் இணைந்திருக்கிறார். அதுமட்டுமின்றி மேக்கிங் வீடியோவை பார்க்கும்போது படம் வேறு ரகத்தில் உருவாவது உறுதியாகிறது. எனவே இந்தப் படம் விக்ரமுக்கு மெகா ஹிட் படமாக அமையும் எனவும் அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தங்கலான் கதை என்ன?: கேஜிஎஃப் தங்க சுரங்கத்திற்கு அருகில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கைதான் தங்கலான் படத்தின் மையக்கரு எனவும் 1870ஆம் ஆண்டு முதல் 1940ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தை தங்கலான் ரசிகர்களுக்கு நிச்சயம் காட்சிப்படுத்தும் என கூறப்படுகிறது. சார்பட்டா பரம்பரையில் 1980களை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்திய இரஞ்சித் 1870 முதல் 1940ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தையும் அச்சு அசலாக காட்சிப்படுத்தியிருப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே இருக்கிறது.
விலா எலும்பு முறிவு: இப்படிப்பட்ட சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்கலான் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. அப்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் விக்ரமும் விலா எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து ஓய்வெடுத்தார். விரைவில் மீண்டும் அவர் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என தெரிகிறது. இதற்கிடையே, தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப பா.இரஞ்சித் திட்டமிட்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.
தங்கலான் அப்டேட்: இந்நிலைஇ பா.இரஞ்சித் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு நடிகரும் அற்புதமான உழைப்பை இப்படத்துக்கு கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் இவ்வளவு உழைக்க வேண்டுமா என நான் யோசிப்பேன். ஆனால் இந்தப் படத்துக்கு இப்படித்தான் உழைக்க வேண்டும் என எனக்கு தோன்றும். நடிகர்கள் மட்டுமின்றி கேமராமேன், ஆர்ட் டைரக்டரில் தொடங்கி சின்ன சின்ன டெக்னீசியன்வரை ரொம்பவே சப்போர்ட் செய்தார்கள்.
20 நாள்கள்தான் ஷூட்டிங்: தங்கலான் படத்தின் ஷூட்டிங் இன்னும் 20 நாள்கள்தான் பாக்கி இருக்கிறது. அதை முடித்துவிட்டேன் என்றால் ஒரு நல்ல சினிமாவாக, தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் சினிமாவாக, அவர்கள் மட்டுமின்றி உலக அளவில் கொண்டாடப்படும் சினிமாவாக இந்தப் படம் அமைவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன" என்றார்.


Click it and Unblock the Notifications











