என்டிஏ கூட்டணி வேட்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்குக்கு ஆதரவு.. பா.இரஞ்சித் அதிரடி.. இப்படி செஞ்சிட்டாரே
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பா.இரஞ்சித். இதுவரை அவர் இயக்கியிருக்கும் ஒவ்வொரு படமும் பெரிய விவாதத்தை சமூகத்தில் கிளப்பியிருக்கின்றன. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான தங்கலான் திரைப்படம் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோரை வைத்து வேட்டுவம் படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் சார்பட்டா பரம்பரை 2வையும் இயக்குகிறார். இந்நிலையில் அவரது ட்வீட் ஒன்று கடும் கண்டனங்களை சந்தித்துவருகிறது.
வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்து அட்டகத்தி படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கி இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தார். அவர் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விவாதத்தை கிளப்பிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக வேட்டுவம், சார்பட்டா பரம்பரை 2 ஆகிய இரண்டு படங்களை இயக்குகிறார். இரண்டும் பெரிய எதிர்பார்ப்பை சம்பாதித்திருக்கின்றன.

அரசியல் கருத்துக்கள்: இரஞ்சித்தை பொறுத்தவரை தன்னுடைய சினிமாவில் மட்டும் அரசியல் தொடர்பான கருத்துக்களை பேசுபவர் இல்லை. ரியல் வாழ்க்கையிலும் அதிரடியாக கருத்து தெரிவிப்பவர். முழுக்க முழுக்க ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கமே நிற்பார். அதேபோல் விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கும் தனது ஆதரவை கொடுக்கக்கூடியவர். இந்நிலையில் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் திரு.வி.க.நகர் தொகுதியில் களமிறங்குகிறார். அவருக்கு இரஞ்சித் தனது ஆதரவை கொடுத்திருக்கிறார்.
இரஞ்சித்தின் ட்வீட்: அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது.
நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வலுக்கும் கண்டனங்கள்: அவரது இந்த ஆதரவு நிலைப்பாடு அவருக்கு எதிரான விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் என்னதான் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியாக இருந்தாலும்; தேர்தலில் அவர் நிற்பது அதிமுக - பாஜக கூட்டணியில். அப்படி இருக்கும்போது காலம் முழுவதும் சனாதன எதிர்ப்பை பதிவு செய்யும் இரஞ்சித் இப்போது தனது கொள்கையை தளர்த்திக்கொண்டு ஏன் என்டிஏ கூட்டணியின் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். கொள்கையா பழக்கமா என்று வந்தால் கொள்கை பக்கம்தான் நிற்க வேண்டும். அதை இரஞ்சித் மறந்துவிட்டார் போல என விளாசிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications















