தமிழ்நாடு அரசியலில் மாற்றம் இருக்கனும்.. பா. ரஞ்சித் சொன்ன கருத்து.. விஜய்க்கு ஆதரவா?
சென்னை: இயக்குநர் மற்றும் நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் பா. ரஞ்சித் அண்மையில் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது தெரிவித்த கருத்துக்கள் இணையத்திலும் அரசியல் தளத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் மாணவர்கள் அரசியல் குறித்து அதிகம் பேசுகிறார்கள். அதனால் மாற்றம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு, பா. ரஞ்சித் பேசுகையில், “ நிச்சயமாக மாற்றம் இருக்கும். கட்சி சார்பற்ற இளைஞர்கள் அரசியல் பேசுவதைப் பார்க்க முடிகிறது. சமூகத்தின் மீது அக்கறையுடன் செயல்படும் இளைஞர்களைப் பார்க்க முடிகிறது. பல இளைஞர்கள் வலைதளங்களில் இயங்குகிறார்கள். பாண்டிச்சேரியில் எல்லாம் 91 சதவீதம் வாக்குபதிவு நடைபெற்றுள்ளது என்பதே பெரிய மாற்றமாகத்தான் இருக்கிறது.
அதிகமான மக்கள் ஓட்டு போட்டுள்ளனர், ஓட்டு போட முன் வந்துள்ளனர். அதேபோல் தமிழ்நாட்டிலும் பாண்டிச்சேரி போல வாக்குசதவீதத்தில் மாற்றம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார். அடுத்ததாக மாற்றம் இருக்கனுமா என்று கேட்டதற்கு, மாற்றம் இருக்கனும் என்று பதில் அளித்தார். இவரது இந்த பதில் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பலரும் இயக்குநர் பா. ரஞ்சித் சொன்னது, நடிகர் விஜய்க்கு ஆதரவான கருத்து என்று தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குநர் பா. ரஞ்சித் தற்போது வேட்டுவம் படத்தின் போஸ்ட் புரெடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படம் இயக்குநர் பா. ரஞ்சித்தின் திரை வாழ்க்கையில் முக்கியமான படமான இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்தில் கெத்து தினேஷ், ஆர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அதேபோல் படத்தில் சோபிதா துலிபாலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான முந்தைய படங்களில் இருந்து மொத்தமாக வித்தியாசப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணி: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலைப் பொறுத்தவரையில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் அதிமுக கூட்டணியில் சென்னை திரு.வி. நகர் தொகுதியில் போட்டியிடும் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஆதரவு அளிப்பதாக வெளிப்படையாகவே அறிவித்தார். அதேபோல் விசிக தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்ததும் அவர் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார். ஆனால் அதன் பின்னர் விசிக தலைவர் திருமாவளவன் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.
அதிருப்தி: ஆம்ஸ்ட்ராங் படுகொலை, அவரது படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை, தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் தலித் மக்களுக்கு எதிரான அட்ராசிட்டிகள் உள்ளிட்டவற்றால் பா. ரஞ்சித் திமுக அரசின் மீது பெரும் அதிருப்தியில் உள்ளார், அதனால் தான் தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகி நிற்கிறார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











