Thangalaan - நான் ரொம்பவே சுயநலமான ஆளுங்க.. தங்கலான் டீசர் வெளியீட்டு விழாவில் பா.இரஞ்சித் ஓபன் டாக்
சென்னை: Thangalaan Teaser (தங்கலான் டீசர்) தங்கலான் பட டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பா.இரஞ்சித் தான் ரொம்ப சுயநலமான ஆள் என்று பேசினார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பா.இரஞ்சித். அட்டக்கத்தியில் ஆரம்பித்த அவரது பயணம் தற்போது தங்கலானில் வந்து நிற்கிறது. தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் சமூகத்திற்கு தேவையான கருத்தை; ஒடுக்கப்படுபவர்களின் வலியை எந்த சமரசமுமின்றி ரசிகர்களுக்கு காட்சிப்படுத்துபவர். இதனாலேயே அவருக்கு பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

தங்கலான்: கடைசியாக அவர் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படம் படுதோல்வியை சந்தித்தது மட்டுமின்றி கடும் விமர்சனத்தையும் சந்தித்தது. இந்த சூழலில் அவர் முதன்முதலாக விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கிறது.
தங்கலான் ரிலீஸ்: தங்கலான் படம் அடுத்த வருடம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் டீசர் இன்று வெளியானது. டீசருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக எந்த வசனமும் இல்லாமல் காட்சிகளை வைத்தே டீசர் மூலம் ரசிகர்களை மிரட்டியிருக்கிறார் பா.இரஞ்சித். இந்நிலையில் இன்று நடந்த டீசர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
பா.இரஞ்சித் பேச்சு: அப்போது பேசிய பா.இரஞ்சித், " ஒரு நடிகராக விக்ரமிடம் மிகப்பெரிய வேல்யூ இருக்கிறது. அதற்காகவே அவருடன் இணைவதற்கு ரொம்பவே ஆர்வமாக காத்திருந்தேன். தங்கலான் கதையை யோசிக்கும்போது விக்ரம் இந்தப் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றுவிடுவார் என்று தோன்றியது. நான் எப்படி நினைத்தேனோ அதே கதாபாத்திரமாகவே விக்ரம் மாறிவிட்டார். முக்கியமாக நிறைய சாய்ஸ்களை அவர் எனக்கு கொடுத்தார்.
ஏன் இப்படி?: ஒருமுறை விக்ரமிடம் நான், இத்தனை வருடங்கள் கழித்தும் இப்படி உழைக்கிறீர்களே அதற்கான உந்து சக்தி என்று கேட்டேன். படப்பிடிப்பின்போது அவருக்கு விபத்து நடந்தது. ஒரு மாதம் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளாமல் இருந்தார். நான் ரொம்பவே சுயநலமான ஆள். ஆனாலும் கூலான ஆளாக காண்பித்துக்கொள்வேன். சில காட்சிகளை பண்ண முடியாது என்று எனக்கு தோன்றும். அவரிடம் என்ன சார் இதை பண்ணிடுறீங்களா என கேட்டால் ஓ பண்ணிடுறேனே என்பார்.
ஒரு அரசியல்: விக்ரம் மிகப்பெரிய ஆர்ட்டிஸ்ட். அவருடன் கமிட்டானதை அடுத்து எனக்கு பெரும் பயமும் வந்துவிட்டது. இந்த கேரக்டரை ரியலாக காண்பிப்பதற்கு அவர் ரொம்பவே கஷ்டப்பட்டார். நடிகைகள் பார்வதி, மாளவிகாவின் சிறந்த வேலையை இதில் ரசிகர்கள் பார்க்கலாம். அவர்களின் நம்பிக்கைக்குரிய ஆளாக நான் இருக்கிறேன் என்று நினைத்து சந்தோஷமாக இருக்கிறேன். கண்டிப்பாக இந்தப் படம் ரசிகர்களை சுவாரசியப்படுத்தும் என்று நம்புகிறேன். இந்தப் படத்திலும் கண்டிப்பாக ஒரு அரசியல் இருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











