என்னை சாதி வெறியனாகப் பார்க்கிறார்கள்: இயக்குனர் ரஞ்சித் வேதனை
சென்னை: நான் மற்றவர்களுக்கு சாதி வெறியனாகத் தெரிகிறேன் என இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய ரஞ்சித் மற்றவர்கள், தன்னை ஒரு சாதி வெறியனாக பார்ப்பதாக தெரிவித்தார்.

அம்பேத்கர்
கிடைக்கும் மேடைகளில் தான் முன்னெடுக்கும் தலித் அரசியலைப் பேசக்கூடியவர் ரஞ்சித். அப்போது அம்பேத்கரின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மேற்கோள் காட்டி பேசிய அவர், சாதி அடக்குமுறைக்கு எதிராக போராடி, தேரை இழுத்து முன்னால் வைத்துள்ளதாகவும், அந்த தேரை மேலும் முன்னோக்கி செலுத்த பாடுபடுவேன் என்றும் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

பிரச்சனைகள்
மேலும், உனக்கும் எனக்கும் பிரச்சனை என்று வரும்போது, அந்த பிரச்சனையை உன்னிடம் பேசி தீர்ப்பதுதான் எனக்கு சரியாகப் பட்டது. அதனால்தான் அப்படிப்பட்ட அரசியலை கையிலெடுக்க நினைத்தேன். அதுபோன்ற திரைப்படங்களை எடுத்தேன்.

மாரி செல்வராஜ்
இந்த படத்தை எடுப்பதற்கு முன்பு இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றாக எடுப்பாரா என பயம் இருந்தது. ஆனால் படம் பார்த்த பிறகு அந்த பயம் போய்விட்டது. அம்பேத்கரின் தேரை முன்னோக்கி இழுக்கும் படமாக இது நிச்சயம் இருக்கும். என் மனைவி உள்பட என்னைச் சுற்றி இருப்பவர்கள் அன்புமிக்கவர்கள். என்னை நன்றாக பார்த்துக்கொள்வார்கள். அதனால் எப்போதும் பயம் கிடையாது என்றார்.

சாதி வெறியன்
நான் பேசும்போது மற்றவர்களுக்கு சாதி வெறியனாகத் தெரிகிறேன். அது ஒரு உளவியல் போர். சாதியை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல், என்னைப்போல சாதியை எதிர்ப்பவர்களை சாதி வெறியன் என்று சொல்வதை எதிர்க்க ஒரு மனநிலை வேண்டும். அதற்கு நிறை ஆதரவு தேவை. அதை நிச்சயம் பரியேறும் பெருமாள் செய்யும் என்று அவர் கூறினார். இப்படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் கடுமையாக உழைத்துள்ளதாக பாராட்டினார்.
விரைவில் திரைக்கு வர உள்ள இப்படத்தை இயக்குனர் ரஞ்சித்தின் நீலம் புரடொக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. கதிர், ஆனந்தி, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











