Sarpatta 2: வேட்டுவம் ரிலீஸ்க்கு முன்னரே சார்பட்டா பரம்பரை 2.. வேலைகளைத் தொடங்கிய பா. ரஞ்சித்!
சென்னை: தமிழ் திரையுலகில் அம்பேத்கரிய மற்றும் பெரியாரிய அரசியலையும், ஆழமான வாழ்வியலையும் பதிவு செய்யும் இயக்குநர் பா. ரஞ்சித், தற்போது தனது அடுத்தடுத்த பிரம்மாண்ட படைப்புகளால் கோலிவுட்டை அதிர வைத்து வருகிறார். விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் வேட்டுவம். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில், பா. ரஞ்சித் தனது அடுத்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
ரசிகர்களால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சார்பட்டா பரம்பரை 2 படத்தின் ஆரம்பகட்ட வேலைகளை அவர் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார். 2021-ல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி உலகளவில் வரவேற்பைப் பெற்ற சார்பட்டா பரம்பரை, வடசென்னை மக்களின் வாழ்வியலையும் குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் தத்ரூபமாக பேசியிருந்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது அதன் திரைக்கதை அமைக்கும் பணியில் ரஞ்சித் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

கதை விவாதத்தில் என்ன நடக்கிறது?: கிடைத்த தகவல்களின்படி, 'சார்பட்டா பரம்பரை 2' படத்தின் கதை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மட்டுமன்றி, 80-களின் இறுதியில் நடக்கும் ஒரு புதிய அரசியல் மற்றும் விளையாட்டுப் பின்னணியைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. கபிலன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யா, இந்தப் பாகத்திற்காக மீண்டும் தனது உடலமைப்பை தயார் செய்யத் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. வேட்டுவம் படத்தின் ரிலீஸ் வேலைகளுக்கு இடையே, தினசரி பல மணி நேரங்களை தனது உதவி இயக்குநர்களுடன் கதை விவாதத்திற்காக ரஞ்சித் ஒதுக்கி வந்துள்ளார். இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் கதை மற்றும் திரைக்கதை அமைத்ததில் அவருக்கு உடன் உதவியாக இருந்த எழுத்தாளர் தமிழ் பிரபாவுடன் பா. ரஞ்சித் இணைந்து கொடைக்கானலில் தங்கி கதையை டெவலப் செய்யும் வேலைகளில் இருக்கிறாராம்.
ஏன் இந்த வேகம்?: 'வேட்டுவம்' ஒரு வித்தியாசமான த்ரில்லர் மற்றும் வாழ்வியல் சார்ந்த படமாக உருவாகி வருகிறது. இதன் போஸ்ட்-புரொடக்ஷன் வேலைகள் நடக்கும் அதே நேரத்தில், சார்பட்டா 2 ஸ்கிரிப்ட்டை முடித்துவிட்டு, இந்த ஆண்டு இறுதியிலேயே படப்பிடிப்புக்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் வேட்டுவம் படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு பேச்சு ஓடிக் கொண்டு உள்ளது.

குத்துச்சண்டை மோதல்: வடசென்னை குத்துச்சண்டை பரம்பரைகளின் மோதல் மீண்டும் திரையில் எப்போது ஒலிக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வேட்டுவம் தரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், சார்பட்டா 2 குறித்த இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











