Sarpatta Parambarai 2: கமல் படம் எப்போது..? நழுவிய பா ரஞ்சித்... அடுத்து சார்பட்டா பரம்பரை 2 தான்!
சென்னை: பா ரஞ்சித் தற்போது சீயான் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு 80% வரை முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே பிகே ரோஸி திரைப்பட விழாவை இயக்குநர் பா ரஞ்சித் ஒருங்கிணைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசிய பா ரஞ்சித், சார்பட்டா பரம்பரை 2, கமல் நடிக்கும் படங்கள் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

சார்பட்டா பரம்பரை 2
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பி கே ரோசி திரைப்பட திருவிழா நடத்தப்படுகிறது. இயக்குநர் பா. ரஞ்சித் தொடங்கி வைத்த இந்நிகழ்ச்சியில், தீபா தன்ராஜ், மாரி செல்வராஜ், லெனின் பாரதி, ஷான், தியாகராஜன் குமாரராஜா, துருஷாந் இங்லே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அப்போது பேசிய பா ரஞ்சித்திடம் அவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் குறித்து கேட்கப்பட்டது.
விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கமல் சாருக்காக மதுரை பின்னணியில் ஒரு கதை இருப்பதாக பா ரஞ்சித் பேசியிருந்தார். அதேமேடையில், அந்த கதையை முடித்துவிட்டு வாருங்கள், கண்டிப்பாக சேர்ந்து படம் பண்ணலாம் என கமல்ஹாசனும் நம்பிக்கை தெரிவித்து இருந்தார். அப்போது முதல் கமல் - பா ரஞ்சித் கூட்டணி குறித்து அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதனை முன்வைத்தே நேற்று பா ரஞ்சித்திடம் செய்தியாளர்கள் கமல் படம் குறித்த கேள்வியை கேட்டனர்.

இந்த கேள்விக்கு பதிலளித்த பா ரஞ்சித், "கமல் சார் படத்துக்கு இன்னும் கதை எழுதத் தொடங்கவில்லை. முதலில் கதையை எழுதி அதனை கமல் சார் பார்த்து ஓக்கே சொன்ன பின்பு தான் படம் பண்ணுவது குறித்து முடிவு செய்ய முடியும். அதனால் இப்போதைக்கு அதுபற்றி அப்டேட் இல்லை" என்றார். பா ரஞ்சித்தின் இந்த பதில், ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியுடன் கபாலி, காலா என மிரட்டிய பா ரஞ்சித், விரைவில் கமலுடனும் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கதையே இன்னும் ரெடியாகவில்லை என பா ரஞ்சித் கூறியுள்ளது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
அதேபோல் சார்பட்டா பரம்பரை 2 குறித்தும் செய்தியாளர்கள் கேள்வியை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த பா ரஞ்சித், தங்கலான் படம் முடிந்ததும் தான் சார்பட்டா பரம்பரை 2 தொடங்கப்படும். இந்தப் படத்துக்கும் கதை இன்னும் ரெடியாகவில்லை. ஸ்க்ரிப்ட் ரெடியானதும் படப்பிடிப்புக்கு செல்வோம் என பா ரஞ்சித் கூறியுள்ளார். தங்கலான் படம் முடியும் முன்னரே சார்பட்டா பரம்பரை 2 குறித்து அப்டேட் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைப்படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் எனவும் பா ரஞ்சித் அப்டேட் கொடுத்துள்ளார். விக்ரம் - பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் தங்கலான் பட ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. தங்கச் சுரங்கத்தின் பின்னணியில் பீரியட் படமாக உருவாகி வரும் தங்கலான், இன்னும் 20% மட்டுமே ஷூட்டிங் நடைபெறவுள்ளதாக பா ரஞ்சித் கூறியுள்ளார். மேலும், தங்கலான் படப்பிடிப்பு மே மாதம் முடிந்துவிடும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











