சர்வதேச அங்கீகாரம் பெற்ற தங்கலான்.. கெத்து காட்டும் சியான் விக்ரம் பா.ரஞ்சித்!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி கடைசியாக வெளியான படம் தங்கலான். விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். இந்தப் படம் லைவ் சவுண்ட் முறையைப் பின்பற்றி படமாக்கப்பட்டது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்தார். ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
கடந்த ஆண்டு வெளியான படங்களில் தங்கலான் மிகவும் முக்கியமான படங்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளது. காரணம் படத்தின் திரைக்கதைத்தான். மாய - எதார்த்த திரைக்கதையில் 2000 ஆண்டுகால இந்திய வரலாற்றின் தொன்மங்களை சிறப்பாக காட்சிப் படுத்திய படமாக தங்கலான் உருவெடுத்தது. படத்தின் மையக் கதாப்பாத்திரமான தங்கலான் கதாபாத்திரத்தின் கதை நகர்வு ஒரு கதையை ரசிகர்களுக்குச் சொன்னால், அசோகா என்ற கதாபாத்திரம் சொன்ன வரலாறு மிகவும் முக்கியமானது.

படத்தில் இடம் பெற்ற பாடல்கள் தொடங்கி, பின்னணி இசை , லைவ் சவுண்ட் முறை என பல பாராட்டுக்களைப் பெற்றது. படத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்துமே சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. இதனால் நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்தனர். இது ரசிகர்கள் பலராலும் பாராட்டப்பட்டது.
பா.ரஞ்சித்: படத்தினை இயக்கியதற்காக சிறந்த இயக்குநருக்கான விருது, சென்னை திரைப்படத் திருவிழாவில், ஜூரி விருது பா. ரஞ்சித்துக்கு வழங்கப்பட்டது. பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்த தங்கலான் ரூபாய் 100 கோடிகளை பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் செய்தது. படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக மாறினாலும், ரசிகர்கள் மத்தியில் படக்குழு எதிர்பார்த்த அளவிற்கான விவாதத்தை அல்லது பிணைப்பினை உருவாக்கவில்லை. இது தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித்தே ஒரு பேட்டியில், இந்தப் படத்தில் எங்கு பிரச்னை? இந்தப் படம் எதனால் மக்கள் மத்தியில் கனெக்ட் ஆகவில்லை என்ற கேள்வி எனக்குள் இன்னும் ஓடிக்கொண்டு உள்ளது என கூறியிருந்தார்.
ரோட்டர்டோம்: இப்படியான நிலையில், தங்கலான் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது தங்கலான் படத்தின் இயக்குநர் கட் 2025ஆம் ஆண்டு ரோட்டர்டோம் திரைப்படத் திருவிழாவில் திரையிடத் தகுதி பெற்றுள்ளது. இது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் இது சென்சார் செய்யப்படாதது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. நெதர்லாந்தில் நடைபெற்று வரும் 54வது ரோட்டர்டோம் திரைப்படத் திருவிழாவில், தங்கலான் திரைப்படம் திரையிடப்பட தகுதி பெற்றிருப்பது, படத்திற்கு சர்வதேச அங்கீகரம் கிடைத்துள்ளது.
மூன்று படங்கள்: இதுமட்டும் இல்லாமல், ஏற்கனவே இயக்குநர் ராமின், பறந்து போ, இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநரான, வர்ஷா பரத்தின் பேட் கேர்ள் ஆகிய படமும் ரோட்டர்டோம் திரைப்படத் திருவிழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழ் சினிமாத்துறையில் இருந்து மொத்தம் மூன்று படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











