நடிப்புக்கு கொஞ்சம் ரெஸ்ட்... இப்போ ஃபுல்லா பாட்டுல இறங்கிட்டேன்... பா. விஜய்
சென்னை: நடிப்பு, இயக்கம் ஆகியவை ஒரு பக்கம் இருந்தாலும் இப்போது பாடலில் அதிகக் கவனம் செலுத்துகிறேன் என்று பாடலாசிரியர் பா.விஜய் தெரிவித்தார்.
பிரபல பாடலாசிரியர் பா.விஜய். ஆட்டோகிராப் படத்துக்கு எழுதிய பாடலுக்காகத் தேசிய விருது பெற்றவர். ஞாபகங்கள் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்துக்கு கதை, பாடல்களையும் அவரே எழுதினார். அடுத்து கலைஞர் வசனம் எழுதிய இளைஞன் படத்தில் நடித்தார். ஸ்ட்ராபெர்ரி என்ற படத்தை தயாரித்து இயக்கி, நடித்தார்.

இடையில் நடிப்பு, இயக்கம் என்று கவனம் செலுத்திய பா.விஜய், இப்போது பாடல் எழுவதில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, பாடல் எழுதுவதில் இப்போது அதிக கவனம் செலுத்தி வருகிறேன். விஷாலின் ஆக்ஷன் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதினேன். சிவகார்த்திகேயனின் ஹீரோ, சீனு ராமசாமியின் மாமனிதன் உட்பட பல படங்களுக்கு அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறேன்.
இடையில் நடிப்பில் கவனம் செலுத்தியதால் பாடல் எழுதுவதை அதிகமாகத் தொடர முடியவில்லை. அதனால் நடிப்பு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்திருந்தேன். இப்போது பாடலில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறேன்.
நான், இயக்கி நடிக்கும் புதிய படம் அடுத்த மாதம் தொடங்குகிறது. இது த்ரில்லர் வகை படம். படம் நடித்து இயக்கினாலும் பாடல் எழுவதும் தொடரும் என்றார்.


Click it and Unblock the Notifications











