அப்பாவுக்கு பையன் தப்பாம பிறந்திருக்கான்.. மீண்டும் திரையில் கேப்டன்.. படை தலைவன் பிரபலங்கள் விமர்சனம்!
சென்னை: இயக்குநர் அன்பு இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படை தலைவன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 500 திரையரங்குகளில் வெளியானது. நேற்று இரவு சினிமா பிரபலங்களுக்கான செலிபிரிட்டி ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது. அதில், கலந்துக் கொண்டு படத்தை பார்த்த சரத்குமார், ராதா ரவி, தேமுதிக தலைவர் பிரேமலதா, இயக்குநர் செல்வமணி உள்ளிட்ட பலர் படத்தை பாராட்டி விமர்சனம் கொடுத்துள்ளனர்.
பல ரிலீஸ் தேதி சொல்லப்பட்டு, ஏகப்பட்ட சிக்கல்களை கடந்து இந்த படம் கடைசியாக இன்று வெளியாகி இருக்கிறது என உணர்ச்சிவசப்பட்டு படத்தின் ஹீரோ சண்முக பாண்டியன் பேசினார். கடுமையாக உழைத்து இருக்கிறோம், எங்களுக்கு உங்களோட சப்போர்ட் தேவை என்றும் மக்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கோட் படத்தில் விஜயகாந்த் ஏஐ காட்சிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த படத்திலும் விஜயகாந்தை மீண்டும் ஏஐ மூலம் படக்குழு கொண்டு வந்துள்ள நிலையில், விஜயகாந்த் ரசிகர்களுக்கும் இந்த படம் ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியானது படை தலைவன்: டைரக்டர் அன்பு இயக்கத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் யானைகளின் பாதுகாப்பு தொடர்பான படமாக இந்த படை தலைவன் படம் உருவாகியுள்ளதாக படம் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். படத்தின் டீசர் மற்றும் டிரைலர் காட்சிகளிலும் விக்ரம் பிரபு நடித்த கும்கி படத்துக்குப் பிறகு யானைகளை வைத்து தமிழில் ஒரு அருமையான படமாக இந்த படம் உருவாகி இருப்பதாகவே தெரிகிறது. இசைஞானி இளையராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். யாமினி சந்தர் ஹீரோயினாக நடித்துள்ளார்.
சரத்குமார் விமர்சனம்: மீண்டும் கேப்டனை ஏஐ மூலம் கண்டது ரொம்பவே உணர்ச்சிவசப்படுத்தியது. கேப்டன் மகன் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது என்னோட நண்பர் விஜயகாந்தை மீண்டும் பார்ப்பது போலத்தான் உள்ளது. படத்தின் கதையும் சமூக பொறுப்புடன் கூடிய கதையாகவும் கடவுள் நம்பிக்கையை வைத்துக் கொண்டு சிலர் ஏமாற்றுவதையும் சுட்டிக் காட்டியிருப்பது சிறப்பாக உள்ளது என படத்தை பாராட்டி பேசியுள்ளார்.
ராதா ரவி ஹேப்பி: என்னை இந்த படம் வியக்க வைத்து விட்டது. எப்படி இந்த பையன் இவ்வளவு நல்லா நடிச்சிருக்கான்னு யோசிக்க வைத்தது. ரெண்டு, மூன்று தடவை இந்த படத்தை தியேட்டருக்குச் சென்று கட்டாயம் நான் பார்ப்பேன், நீங்களும் படத்தை பார்த்து உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்க என ராதா ரவி பேசிச் சென்றார்.
பிரேமலதா எமோஷனல்: கேப்டனின் மனைவியும் சண்முக பாண்டியனின் அம்மாவுமான பிரேமலதா ரொம்பவே எமோஷனல் ஆகிவிட்டார். படம் ஷூட்டிங் நடந்துக் கொண்டிருந்த போது, சில முறை சென்றிருந்தாலும், முழு படத்தையும் இன்று தான் பார்த்தேன். சண்முக பாண்டியன் ரொம்ப நல்லாவே நடிச்சிருக்கான். கேப்டனை மீண்டும் திரையில் பார்த்தது சந்தோஷத்தையும் அதே நேரத்தில் ஒருவித அழுத்தத்தையும் கொடுத்தது என ரொம்பவே எமோஷனல் ஆகிவிட்டார்.
அப்பாவுக்கு பையன் தப்பாம பிறந்திருக்கான்: இயக்குநர் செல்வமணி பேசும் போது, சண்முக பாண்டியனை திரையில் பார்க்கும் போது விஜயகாந்த் சாரை பார்ப்பது போலத்தான் உள்ளது. அப்பாவுக்கு பையன் தப்பாம பிறந்திருக்கான். ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் விளையாடி இருக்கிறார். படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார். மேலும், பல பிரபலங்களும் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்து வாழ்த்தியுள்ளனர். கூடிய சீக்கிரமே படை தலைவன் படத்தின் முழு விமர்சனம் வந்துவிடும்.


Click it and Unblock the Notifications











