Padai Thalaivan Public Review: ரமணா விஜயகாந்த் வராரு.. படை தலைவன் படம் எப்படி?.. பப்ளிக் விமர்சனம்!
சென்னை: இயக்குநர் அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியான படை தலைவன் படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கே லட்சக் கணக்கான மக்கள் ஒன்று திரண்டு வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரன் அரசியல்வாதியாக மாறிவிட்டார். அவரது சகோதரர் சண்முக பாண்டியன் அப்பாவை போல சினிமாவில் அதிக ஆர்வத்துடன் உள்ளார். சகாப்தம் படத்தின் மூலம் சினிமாவில் சண்முக பாண்டியன் அறிமுகமானார்.

ஆனால், அவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் மற்றும் நல்ல கதைகள் அமையவில்லை. இந்நிலையில், யானைகளை வைத்து வித்தியாசமாக உருவாக்கியுள்ள படை தலைவன் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.
கும்கியை விட சூப்பர்: பிரபு சாலமன் இயக்கத்தில் சிவாஜி கணேசனின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு கும்கி படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் யானை பாகனாக அவர் நடித்திருப்பார். அந்த படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் யானைகளை வைத்து உருவாக்கப்பட்ட படமாக இந்த படம் உள்ள நிலையில், அந்த படத்துடன் ஒப்பிட்டுக் கேள்வி கேட்கப்பட்ட நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் கும்கி படத்தை விட சூப்பர் என்றும், அந்த படத்தோட கதை வேறு, இந்த படத்தில் மனித நேயத்தை பற்றி இயக்குநர் சொல்லியிருக்கிறார் என விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.
சின்ன கேப்டன்: விஜயகாந்த் என்றாலே லெக் கிக் தான் ஸ்பெஷல். தனது அப்பாவை போலவே விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனும் முதல் ஷாட்டே காலை காட்டியபடி தான் சண்டைக் காட்சியுடன் என்ட்ரி கொடுத்துள்ளார் என்றும் சின்ன கேப்டன் தான் இவர் என்றும் விஜயகாந்த் ரசிகர்கள் சண்முக பாண்டியனை கொண்டாடி வருகின்றனர்.
இன்னும் உழைப்பு வேண்டும்: விஜயகாந்த் மகன் நடிக்க வந்திருக்கும் நிலையில், அப்பா பெயரை காப்பாற்ற வேண்டும் என்றால், தொடர்ந்து இதே போல நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து அவர் நடிக்க வேண்டும். ஒரு சில இடங்களில் அவரது நடிப்பு இன்னும் பயிற்சி தேவை என்று தான் தோன்றுகிறது. இன்னமும் உழைப்பை அதிகம் போட்டால் தான் நல்ல நடிகராக முடியும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரமணா விஜயகாந்த் வராரு: விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜயகாந்த் மாஸ்க் அணிந்து விஜயகாந்த் போலவே விஜய் அறிமுக காட்சியில் நடித்திருப்பார். ஆனால், இந்த படத்தில் விஜயகாந்தை மீண்டும் கொண்டு வந்திருக்கின்றனர். அதுவும் ரமணா படத்தில் வரும் புரொஃபஸர் கதாபாத்திரத்திலேயே விஜயகாந்த் வருகிறார் என்றும் கேப்டனை பார்த்ததே தங்களுக்கு ரொம்ப சந்தோஷம் என்றும் படத்தை பாராட்டி வருகின்றனர்.
வாழ்த்தும் ரசிகர்கள்: தேமுதிக தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் மொத்தமாக இன்று வெளியான படை தலைவன் படத்தை பார்க்க குவிந்து விட்டார்கள். விஜயகாந்த் போலவே சினிமாவில் சண்முக பாண்டியன் பெரிய நடிகராக வேண்டும் என பலரும் வாழ்த்தி வருகின்றனர். சண்முக பாண்டியனை வைத்து ரமணா 2 படத்தை எடுக்கப் போவதாக ஏ.ஆர். முருகதாஸ் பேசிய நிலையில், இந்த படத்திலும் ரமணா கனெக்ஷன் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











