ரஜினியின் அதிரடி நடவடிக்கை.. அமேஸானில் இருந்து உடனடியாக நீக்கப்பட்ட படையப்பா.. என்ன காரணம்?
சென்னை: படையப்பா படம் அமேஸான் தளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
Recommended Video
1999ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் படையப்பா. இந்தப் படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார்.
இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மறைந்த நடிகை சவுந்தர்யா நடித்திருந்தார். ரஜினிக்கு வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடித்தார்.

நடிகர் பட்டாளம்
அவர்கள் மட்டுமின்றி சிவாஜி கணேசன், லட்சுமி, ராதாரவி, நாசர், செந்தில், மணிவண்ணன், அப்பாஸ், ரமேஷ் கண்ணா, வடிவுக்கரசி, பிரீதா என ஒரு பெரும் நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது.

ரம்யா கிருஷ்ணன் நடிப்பு
ஏஆர் ரஹ்மான் இசையில் பாட்டுகள் அனைத்தும் பட்டையை கிளப்பின. ரஜினிகாந்துக்கு போட்டியாக ரம்யா கிருஷ்ணனின் அட்டகாசமான நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

அமேஸானில் வெளியீடு
இந்தப்படத்தின் வசூல் கமலின் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தின் வசூலை மிஞ்சி சாதனை படைத்தது. படையப்பா படத்தை அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ரஜினியே தயாரித்திருந்தார். இந்நிலையில் இந்தப்படம் அமேஸான் தளத்தில் வெளியிடப்பட்டது.

உரிமை கொடுக்கப்படவில்லை
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்த விஷயம் ரஜினியின் கவனத்துக்கு சென்றது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேசிய ரஜினிகாந்த் OTT தளத்தில் படத்தை ரிலீஸ் செய்ய யாருக்கும் உரிமை கொடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

படையப்பா நீக்கம்
மேலும் அமேஸான் தளத்தில் இருந்து படையப்பா படத்தை உடனடியாக நீக்கும்படியும் கூறியுள்ளார் ரஜினிகாந்த். இதனை தொடர்ந்து படம் அமேஸான் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தற்போது லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள் முடங்கியிருக்கும் மக்கள் OTT தளத்தில் படத்தை பார்த்து வருகின்றனர்.

புதிய படங்கள்
இதனை காரணமாக வைத்து ஏராளமான படங்கள் OTT தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. பல புதியப் படங்களும் தியேட்டருக்கு செல்லாமல் டிஜிட்டலில் ரிலீஸ் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











