Padayappa Re Release Experience: தலைவர் எப்போதுமே தனி வழிதான்.. படையப்பனா? நீலாம்பரியா? ரீ ரிலீஸ் எக்பீரியன்ஸ்
சென்னை: படையப்பா படத்தை டிவி, உள்ளூர் திருவிழாவின் போதும் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளின் போதும் திரை கட்டி திரையிட்ட போது எல்லாம் பார்த்திருக்கிறேன். இது எல்லாம் சிறுவயது அனுபவங்கள் தான் என்றாலும், அதன் பின்னர் லேப் டாப்பில் தோன்றும்போது எல்லாம் பார்த்தது என மொத்தமாக எப்படியும் குறைந்தது 10 முறையாவது பார்த்திருப்பேன். தலைவரின் 75 வது பிறந்த நாளுக்கு படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்கள் என்று அறிவிப்பு வெளியானதும், படத்துக்கு கட்டாயம் போகிறோம் என்ற முடிவில் இருந்தேன்.
வேலையை சீக்கிரமே முடித்துவிட்டு மாலை படத்திற்கு போகலாம் என்று முடிவெடுத்து வேலை செய்து கொண்டு இருந்தேன். அப்போதுதான் எங்களின் எடிட்டர் போன் செய்து, நீங்கள் படையப்பா படத்தை பார்த்து விட்டு உங்கள் அனுபவத்தை எழுதுங்கள் என்று தெரிவித்தார். அடடே இப்படி ஒரு வாய்ப்பா? என்று யோசித்த நான், உடனே அவருக்கு ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு, தியேட்டருக்கு படம் பார்க்க புறப்பட்டுவிட்டேன்.

இந்த படம் வெளியாகும்போது 4 வயது குழந்தையாக இருந்த நான் இன்றைக்கு 29வது வயதில் படத்தை முதல் முறையாக தியேட்டரில் பார்க்க போகிறேன். தலைவர் படம் என்பதால் தியேட்டரில் அனைத்து வயதுடையவர்களும் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் தான் சென்றேன். அதேபோல் 60 களை கடந்த ரசிகர்கள் தொடங்கி 5 வயது குழந்தைகள் வரை தியேட்டரில் இருந்தனர். 2கே கிட்ஸ்களும் கணிசமாக இருந்தனர். அதேபோல் பெண் ரசிகைகள், கணவன் மனைவி குழந்தையுடன் வந்தர்கள் என தியேட்டர் பாதி நிறைந்து காணப்பட்டது.
ம்னப்பாடமான டயலாக்குகள்: ஏற்கனவே பார்த்த படம் தான் என்றாலும் ரசிகர்கள் தியேட்டருக்குள் என்ன மாதிரி ரியாக்ஷன் கொடுக்கப் போகிறார்கள் என்று பார்க்க ஆவலாக காத்துக் கொண்டு இருந்தேன். நான் அமர்ந்திருந்த இருக்கையைக் கடந்து சென்ற தம்பதியரில் தனது குழந்தையிடம் 'தலைவன காட்டுனதும் கைதட்டனும்' என்று சொல்லியே அழைத்துச் செல்கிறார். எனக்கு பின் வரிசையில் அமர்ந்திருந்த 2கே கிட்ஸ்கள் தொடங்கி திரையங்கில் அமர்ந்திருந்த நான் உட்பட அனைத்து ரசிகர்களும் சில ஐகானிக் சீன்கள் வரும்போது எல்லாம் ரஜினியின் டயலாக், ரம்யா கிருஷ்ணனின் டயலாக் என இரண்டையும்,உச்சரித்துக் கொண்டே இருந்தார்கள். அதேபோல் படத்தின் முதல் பாதியில் மணிவண்ணனின் டயலாக்குகள் அனைத்துமே நக்கலும் எகத்தாளமும் நிறைந்தது. அதையும் ரசித்து உச்சரித்ததையும் கேட்க முடிந்தது.

எஸ்.பி.பி: ரஜினி என்றாலே ஓபனிங் சாங்கிற்கு என்று தனி மாஸ் மற்றும் வரவேற்பு உள்ளது என்றால் அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று எஸ்.பி.பியின் குரல் தான். கூலி படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்கும்போதே, ஓபனிங் பாடல் எஸ்.பி.பி. குரலில் இல்லையே என்ற வருத்தம் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் எனக்கு கொஞ்சம் கண்ணீரே வந்தது, மொத்த தியேட்டரும் கூலி ஓபனிங் பாடலுக்கு ஆடிக் கொண்டு இருந்தபோது நான் மட்டும் மிஸ் யூ எஸ்.பி.பி என்று கத்தினேன். மீண்டும் திரையரங்கிற்குள் அவரது குரலைக் கேட்கும் போது கொஞ்சம் மெல்ட் ஆன மொமண்ட் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு முன்னரே ஸ்கீரினில் ரம்யா கிருஷ்ணன் வந்துவிடுகிறார். ரம்யா கிருஷ்ணனுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு என்பது தமிழ் சினிமா ரசிகர்களா இப்படி மாறி விட்டார்கள் என ஆச்சரியத்தைத் தான் கொடுத்தது.
ஸ்கோர் செய்த ரம்யா கிருஷ்ணன்: படம் பார்க்க பார்க்க, ஒரு சில காட்சிகளில் ரஜினிக்கு இணையாகவும் சரி, ரஜினியை விட ஒரு படி மேலே என்று சொல்லும் அளவுக்கு ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரியாகவே வாழ்ந்திருந்தார் என்பதை உணர்த்தியது. அவரது நடை, பார்வை, நீலாம்பரிக்கே என்று இருக்கும் ஒரு ஸ்டைல், வில்லத்தனம் என அனைத்தும் அவரது கதாபாத்திரத்தை ரஜினியை விட எந்த விதத்திலும் குறைந்து வெளிப்படுத்தி விடக்கூடாது என்று கவனமாகவே கையாண்டுள்ளார் ரம்யா கிருஷ்ணன். நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க திட்டமிட்டோம் ஆனால் அது முடியவில்லை என்று தெரித்தார், ரஜினி. ஆனால் இந்த கதாபாத்திரத்தை இவரை விட வேறு யாராலும் சிறப்பாக கையாள முடியாது என்று நிரூபித்து விட்டார் ரம்யா கிருஷ்ணன். படையப்பனுக்கும் நீலாம்பரிக்கும் இடையிலான காட்சிகளைப் பார்க்கும்போது படம் வெளியான கால கட்ட அரசியல் களத்தை நினைத்துப் பார்க்காமலும் இருக்க முடியவில்லை.

5 தலைமுறைகள்: 2கே கிட்ஸ்களிடம் படம் குறித்து கேட்ட போது, இந்த படத்தை நாங்களுமே முன்னர் பார்த்திருக்கிறோம். ஆனால் தலைவர் என்றால் இருக்க கூடிய மாஸ், ஸ்டைலுக்காக தான் படம் பார்க்க வந்தோம். அது வேறு எந்த நடிகருக்கும் இந்த அளவுக்கு மாஸ் இருப்பதில்லை, அதனால்தான் தியேட்டரில் படம் பார்க்க வந்தோம் என்று தெரிவித்தார்கள். அதே நேரத்தில் சில காட்சிகளையும் வசனங்களையும் 2கே கிட்ஸ்கள் கலாய்த்துக் கொண்டு இருந்ததும் திரையரங்கை ஆக்கிரமித்தது.
படையப்பா 2: தலைவர் சொன்னது போல 1950 மாடல் வண்டி, பல லட்சம் கிலோ மீட்டர் ஓடிடுச்சு, நான் யானை இல்லை குதிரை, விழுந்தா டக்குனு எழுந்திருப்பேன் என போன்றவற்றை எல்லாம் அவர் சொன்னது தற்புகழ்ச்சி அல்ல. அது நிதர்சனம். அதுவும், ஐந்து தலைமுறைகளைக் கடந்தும் தனது ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்துக் கொண்டே இருக்கிறார் என்ற நிதர்சனம். கடைசியாக படையப்பா 2 வந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்துடனே வெளியேறினேன்.


Click it and Unblock the Notifications











