72 வயதில் ராஜ வாழ்க்கை.. படிக்காதவன் படத்துல ரஜினி தம்பியா நடிச்ச விஜய் பாபுவின் ஹோம் டூர் இதோ!
சென்னை: சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படிக்காதவன் படத்தில் ரஜினிகாந்த் தம்பியாக நடித்திருப்பார் நடிகர் விஜய் பாபு. 72 வயதாகும் அவர் இன்னமும் செம எனர்ஜியுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனது பீச் ஹவுஸை சுற்றிக் காட்டும் வீடியோ யூடியூப் சேனல் ஒன்றில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
சினிமா பிரபலங்கள் பலர் விலை உயர்ந்த வீடுகளை கட்டி வசித்து வரும் நிலையில், அதன் ஹோம் டூர் வீடியோக்களையும் யூடியூப் சேனல்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், பல ஆண்டுகளாக ரசிகர்கள் கண்ணில் அதிகம் படாமல் இருந்து வந்த நடிகர் விஜய் பாபு தனது பீச் ஹவுஸை சுற்றிக் காட்டியுள்ளார்.

ஒரு வீடு ஒரு உலகம்: 1951 ஆம் ஆண்டு பிறந்த விஜய் பாபு 1978 ஆம் ஆண்டு வெளியான ஒரு வீடு ஒரு உலகம் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, குமரிப் பெண்ணின் உள்ளத்திலே, ருசி கண்ட பூனை, எங்கம்மா மகராணி, கசப்பும் இனிப்பும், படிக்காதவன், தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் மற்றும் கடைசியாக விஷால் நடித்த சக்ரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவை தாண்டி தொழிலிலும் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார் விஜய் பாபு. இவரது மகன் ரமணா சினிமாவில் கைதி, லத்தி மற்றும் சலார் உள்ளிட்ட பல படங்கள் நடித்துள்ளார்.

72 வயதிலும் எனர்ஜி: படிக்காதவன் படத்தில் சிவாஜி மற்றும் ரஜினிக்கு தம்பியாக நடித்த விஜயபாபு இந்த வயதிலும் செம எனர்ஜியாக தனது மூன்று மாடி வீட்டில் கடகடவென ஏறி பீச் வியூவை சுற்றி காட்டுவது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போலவே இவரும் பாபாஜி பக்தர். சாய்பாபா வழிபாட்டில் பல ஆண்டுகளாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
2 விஷயத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம்: இந்த உலகத்திலேயே இரண்டு விஷயங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என பேசிய விஜய் பாபு கடல் அலைகளையும் யானையின் அசைவையும் எப்போதுமே கண்டு ரசிக்கலாம் என கூறியுள்ளார்.

பீச் ஹவுஸ்: கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் பீச் ஹவுஸ் ஒன்றுக்கு சொந்தக்காரராக உள்ள விஜய் பாபு 10 கார் வைத்திருந்தாலும் ஒரு காரில் தான் போவோம், 10 வீடு வைத்திருந்தாலும் ஒரு வீட்டில் தான் இருக்கப் போகிறோம். எனக்கு இந்த வீடு கிடைத்ததும் அதற்கு மேல் வேறு எதுவும் வேண்டாம் என நினைத்து சினிமாவிலிருந்து எல்லாம் ஒதுங்கி விட்டேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளார். அவரது வீட்டின் ஒவ்வொரு அறையையும் அந்த யூடியூப் வீடியோவில் சுற்றிக்காட்டியுள்ளார் விஜய் பாபு.

ஆந்திராவில் குடும்பம்: ஆந்திராவில் பிறந்து வளர்ந்த வெங்கடேஸ்வர ரெட்டி எனும் இவர் சினிமாவுக்கு வந்த நிலையில், விஜய் பாபுவாக மாறினார். மனைவி மற்றும் குடும்பத்துடன் ஆந்திராவிலும் இவருக்கு ஒரு வீடு உள்ளது. சென்னையில் தொழிலை கவனித்து வரும் இவர் வார இறுதி நாட்களில் இந்த பீச் ஹவுஸில் நேரத்தை கழிப்பதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











