Patriot: மம்மூட்டி, மோகன்லால், நயன்தாராவின் தேசப்பற்று.. ‘பேட்ரியாட்’ ரிலீஸ் எப்போ தெரியுமா?
திருவனந்தபுரம்: இந்திய சினிமாவில் புதிய வரலாற்று அத்தியாயத்தைப் படைக்கும் 'பேட்ரியாட்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி, பிரம்மாண்டமான போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. மகேஷ் நாராயணன் இயக்கத்தில், பத்ம பூஷன் மம்மூட்டி, மோகன்லால் மற்றும் நயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த பான் இந்திய மல்டி-ஸ்டாரர், 2026 ஏப்ரல் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் வெளியீட்டுத் தேதி போஸ்டரை, 40-க்கும் மேற்பட்ட முன்னணி இந்திய நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தமிழில் அட்லீயும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவும், ஹிந்தியில் கரண் ஜோஹரும் தங்கள் மொழி போஸ்டர்களை வெளியிட்டனர். மலையாளத்தில் துல்கர் சல்மான், பிரித்விராஜ் சுகுமாரன், டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, உன்னி முகுந்தன், பாசில் ஜோசப், ஜெயசூர்யா, சன்னி வெய்ன், நஸ்லென், நஸ்ரியா நசீம், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உட்படப் பல பிரபலங்கள் இதனைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தனர்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி மற்றும் மோகன்லால் மீண்டும் இணையும் 'பேட்ரியாட்'ட் படப்பிடிப்பு, மலையாள சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு வருடத்துக்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட கட்டங்களாகப் பல நாடுகளில் நடைபெற்றது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைந்த இப்படம், 'Twenty:20' திரைப்படத்திற்குப் பிறகு பல முன்னணி மலையாள நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் இன்னொரு பெரும் படைப்பாகவும் அமைகிறது.
முன்னதாக, மம்மூட்டி, மோகன்லால் ஆகிய முதன்மைக் கதாபாத்திரங்களுடன் நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், ராஜீவ் மேனன் ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இவர்களுடன் ரேவதி, ஜினு ஜோசப், டானிஷ் ஹுசைன், ஷஹீன் சித்திக், சனல் அமன், தர்ஷனா ராஜேந்திரன், செரீன் ஷிஹாப், 'Madras Cafe', 'Pathaan' புகழ் நாடகக் கலைஞரும் இயக்குநருமான பிரகாஷ் பெலவாடி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இயக்குநர் மகேஷ் நாராயணன் 'Take Off', 'Malik' படங்களுக்குப் பிறகு, 'பேட்ரியாட்'டை ஓர் சர்வதேச உளவாளி த்ரில்லராக விரிவான களத்துடனும் நவீன தொழில்நுட்பத்துடனும் உருவாக்கியுள்ளார். இது அதிக நாடுகளில் படமாக்கப்பட்ட மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்தியா (டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொச்சி), இலங்கை, இங்கிலாந்து, அசர்பைஜான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இதன் படப்பிடிப்பு 2024 நவம்பரில் தொடங்கி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிந்தது.
இப்படத்தை Anto Joseph Film Company மற்றும் Kichappu Films சார்பில் அன்டோ ஜோசப் மற்றும் K. G. அனில்குமார் தயாரித்துள்ளனர். C. R. Salim Productions, Blue Tigers London நிறுவனங்களின் கீழ் C. R. சலீம், சுபாஷ் ஜார்ஜ் மானுவல் இணைத் தயாரிப்பாளர்களாகவும், C. V. சாரதி, ராஜேஷ் கிருஷ்ணா நிர்வாகத் தயாரிப்பாளர்களாகவும் செயல்பட்டுள்ளனர்.
வெளியான 'பேட்ரியாட்' டைட்டில் டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது. மம்மூட்டி - மோகன்லால் நடித்த அதிரடி காட்சிகள் படத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தன. இரு ஆளுமைகளின் கம்பீரத்தை காட்டிய டீசர், மலையாள சினிமாவுக்கு இதுவரை இல்லாத தொழில்நுட்பச் சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தி, இப்படம் சிறந்த அனுபவமாக இருக்குமென உறுதியளித்தது. இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் மகேஷ் நாராயணன் தானே எழுதியுள்ளார்.
படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைக்க, மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகேஷ் நாராயணன் மற்றும் ராகுல் ராதாகிருஷ்ணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். வெளிநாடுகளில் இப்படத்தை Truth Global Films நிறுவனம் விநியோகிக்கிறது.


Click it and Unblock the Notifications











