கையிலும் வாயிலும் பரோட்டா.. நடிகர் விஜய் அலுவலகத்தில் பெயிண்டர் மர்ம மரணம்.. போலீசார் விசாரணை
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் அலுவலகத்தில் பெயிண்ட் அடிக்கும் பணி செய்து வந்த பிரபாகரன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் தளபதி 66 படத்துக்காக ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் உள்ளார். அவரது பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், அலுவலகத்தை புதுமைப்படுத்தும் பணி நடைபெற்று வரும் சூழலில் இப்படியொரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

விஜய் பிறந்தநாள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் தனது பிறந்தநாளை வரும் ஜூன் 22ம் தேதி கொண்டாட உள்ளார். அதனை முன்னிட்டு, கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் அலுவலகத்தின் உட்பகுதிகள் புதுமைபடுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த அலுவலகத்தில் தான் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினரை விஜய் அடிக்கடி சந்திப்பது வழக்கம்.

பெயிண்டர் பிரபாகரன்
இங்கு வேலை செய்து வந்து பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பெயிண்டரான பிரபாகரன்(34), நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் தங்கி பெயிண்ட் அடிக்கும் வேலையை செய்து வருகிறார். சனிக்கிழமையன்று சம்பளத்தை பெற்று கொண்டு தன்னுடைய குடும்பத்தினரை காண பழைய வண்ணாரப்பேட்டைக்கு சென்ற பிரபாகரன் நேற்று இரவு 8 மணியளவில் குடிபோதையில் நடிகர் விஜய்யின் அலுவலகத்திற்க்கு வந்துள்ளார்.

மர்ம மரணம்
அங்கிருந்த மேஸ்திரியிடம் தனக்கு பசிப்பதாகவும், பரோட்டா வாங்க 100 ரூபாய் தரும் படி கேட்டு பெற்று கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அவருடன் வேலை பார்க்கும் சக வேலையாட்கள் பார்த்த போது, அலுவலகத்தின் உட்புறமாக கையிலும் வாயிலும் பரோட்டாவுடன் பிரபாகரன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விசாரணை
தகவல் அறிந்து வந்த கானத்தூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக பிரபாகரின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் பரோட்டா சாப்பிட்டதில் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும், உடற்கூறு ஆய்வின் அறிக்கை வந்த பிறகே இறப்பிற்கான முழுமையான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

ஷூட்டிங்கில் பிசி
இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 66 படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் விஜய் ஹைதராபாத்தில் படு பிசியாக பங்கேற்று வருகிறார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்த தகவல்கள் விஜய் காதுக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. உடற்கூறு ஆய்வுக்கு பிறகே மற்ற விவரங்கள் வெளியாகும் என போலீஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











