Namitha House: நடிகை நமிதா வீட்டில் புகுந்தது வெள்ளம்.. 6 அடி உயர நீரில், 2 குழந்தைகளுடன் தவிப்பு
சென்னை: Michaung (மிக்ஜாம்) மிக்ஜாம் புயலால் பெய்த மழையின் காரணமாக பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைந்து நடிகை நமீதா வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது.
மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று முன் தினம் மாலையிலிருந்து நேற்று இரவுவரை சென்னையில் விடாது மழை கொட்டி தீர்த்தது. பேய் மழை என்று சொல்வார்களே அதனை நேரில் நேற்று சென்னைவாசிகள் உணர்ந்தன. குறிப்பாக 2015ஆம் ஆண்டு பெய்த மழையவிட கொடூரமாக பெய்தது எனவும் மக்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

மக்கள் அவதி: கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. அரங்கநாதன் சப் வே, தி.நகர் சப் வே, அம்பத்தூர், சூளைமேடு, வளசரவாக்கம், அண்ணா நகர் என எங்கும் வெள்ளகாடாகவே காட்சியளித்தது. குறிப்பாக பள்ளிக்கரணை லேக் வியூ அப்பார்ட்மெண்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகின.
நகர்ந்த புயல்: 2015ஆம் ஆண்டு 34 செ.மீட்டர்தான் மழை பெய்தது. ஆனால் தற்போது அதற்கும் மேல் மழை பெய்தது. இடைவிடாது கொட்டிய மழையாலும், சென்னைக்கு அருகிலேயே மிக்ஜாம் புயல் நிலைகொண்டிருந்ததாலும் மக்கள் உச்சக்கட்ட பீதியில் இருந்தனர். ஒருவழியாக நேற்று இரவு மிக்ஜாம் சென்னையிலிருந்து நகர்ந்து ஆந்திரா நோக்கி நகர்ந்தது. எனவே மழையும் படிப்படியாக குறைந்தது. ஆந்திரா சோக்கி சென்ற புயல் அங்கு கரையை கடந்தது.
வடிந்த மழைநீர்: மழை நின்ற பிறகு தேங்கியிருந்த மழை நீரும் பெரும்பாலான இடங்களில் வடிந்துவிட்டது. அதுதொடர்பான புகைப்படங்களும் காலையிலிருந்து சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றன. இருந்தாலும் இன்னும் சில இடங்களில் மழை நீர் வடிந்தபாடில்லை. அதற்கு காரணம் அந்த குடியிருப்புகள் எல்லாமே ஏரியை ஆக்கிரமித்து கட்டியதாக கூறப்படுகிறது.
நமிதா வீட்டில் வெள்ளம்: இந்நிலையில் அதிக அளவு நீர் காரணமாக பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்தது. இதனால் அதற்கு அருகில் இருக்கும் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. பள்ளிக்கரணை, அதன் அருகில் உள்ள துரைப்பாக்கம் ஏரியாவில் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. குறிப்பாக துரைப்பாக்கம் எக்ரட் பார்க் குடியிருப்பிலும் வெள்ளம் புகுந்து ஆறு அடி அளவில் தண்ணீர் நிற்கிறது.
அந்த குடியிருப்பில்தான் நடிகை நமிதா தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்துவருகிறார். குழந்தைகளுக்கு ஒரு வயது ஆகிறது. மீட்பு குழுவினர் இன்னும் அங்கு செல்லாததால் நமிதா உட்பட பலரும் தவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











