மகனை நினைத்து வருத்தப்பட்ட நடிகர்.. நம்பிக்கை கொடுத்த சீனியர்!
Recommended Video

சென்னை : பாக்யராஜின் உதவி இயக்குநர் மதுராஜ் இயக்கத்தில் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் ஹீரோவாக நடிக்க உருவாகியிருக்கும் படம் 'தொட்ரா'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய நடிகர் பாண்டியராஜன், தனது மகன் சினிமாவில் பெரிய நடிகராக வரமுடியவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்தப் படத்தின் மூலம் பிருத்விராஜன் நல்ல இடத்தைப் பிடிப்பார் எனப் பேசினார்.

"என் கவலையே அவன் ஒரு ரேஞ்சுக்கு வரலையேங்குறதுதான். ஒரே படத்துல பெரிய ஆளா ஆகிட்டா என்னையே மறந்துடுவான். படிப்படியா வளர்ச்சி இருந்தாத்தான் நல்லது. முன்னாடி பிருத்வி இருந்த சைஸ் பார்த்தா இந்த மேடையே பத்தாது. நடிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் வெறி வந்து ஓடி வெய்ட் குறைச்சாரு. உடனே வெற்றி வந்துட்டா இங்க மரியாதை இருக்காது. இந்தப் படத்தில் பிருத்வி முகத்தில் தேஜஸ் தெரிகிறது. நிச்சயம் நல்ல இடத்தைப் பிடிப்பார்" எனப் பேசினார் பாண்டியராஜன்.
தான் பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது முதன்முதலாக திரையில் தோன்றிய அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார் பாண்டியராஜன். பிறகு பேசிய இயக்குநர் பாக்யராஜ், "பாண்டியராஜன் தன் மகனை பற்றி கவலைப்படுகிறார். அவருக்கு முன்பு சினிமாவுக்கு வந்த என் மகன் சாந்தனுவை பற்றி எவ்வளவு கவலைப்பட்டிருப்பேன். எல்லாவற்றுக்கும் காலம் வரும். வருத்தப்படவேண்டாம்" எனப் பேசினார்.
'தொட்றா' படத்தில் வீணா ஹீரோயினாக நடித்துள்ளார். இயக்குநர் ஏ.வெங்கடேஷ், கூல் சுரேஷ், 'மைனா' சூசன்' ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலைப் பாடியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.


Click it and Unblock the Notifications











