Chithra Father Suicide : சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை.. ரசிகர்கள் வேதனை!
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா, வி.ஜே. சித்ராவாக இருந்து, சின்னத்திரையில் நடிகையாக கால் பதித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இவரது நடிப்பிற்காகவே இந்த தொடரை பல ரசிகர்கள் பார்த்தனர். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி பூந்தமல்லியை அடுத்து உள்ள நசரத் பேட்டையில் உள்ள, தனியார் ஓட்டலில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இப்படியான நிலையில், சித்ரா தற்கொலை செய்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், அவரது தந்தை, காமராஜ் இன்று அதாவது, டிசம்பர் 31ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மேலும் தூக்கிட, மகளின் துப்பட்டாவை அவர் பயன்படுத்தியுள்ளார். இந்தத் தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா, இவர், விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்தார். இவரது நடிப்பு சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. இணையதளத்தில் இவரை ரசிகர்கள் பல லட்சக் கணக்கில் பின் தொடர்ந்தனர். இவருக்கும் இவரது காதலர் ஹேம்நாத் என்பவருக்கும் திருமணம், நடைபெறவுள்ளது என செய்திகள் எல்லாம் வெளியானது. மேலும் இவர்கள் ஏற்கனவே பதிவுத் திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.

பெற்றொர்களின் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. திருமணமாகி மூன்று மாதத்திற்குள் கணவருடன் தங்கியிருந்த ஓட்டலில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டினார் என கைது செய்யப்பட்ட, ஹேம்நாத் சில மாதங்கள் விசாரணைக் காவலில் சிறையில் இருந்தார்.
தீர்ப்பு: சித்ராவின் தற்கொலை வழக்கு, முதலில் தமிழ்நாடு காவல்துறை விசாரித்தது. அதன் பின்னர், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் விசாரித்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை சமர்பித்தனர். இதில், ஹேம்நாத் மீதான குற்றங்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, நீதிமன்றம் அவரை விடுவித்தது. இது சித்ராவின் குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆழ்த்தியது.
மன வருத்தம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் சித்ராவின் தந்தை மேல் முறையீடு செய்தார். ஆனால், அங்கும் ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என, அவரை விடுவித்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தீர்ப்பு வெளியானது. இப்படியான நிலையில், மகளை இழந்த சோகத்தில் இருந்த காமராஜ், அதில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்து வந்துள்ளார் என கூறப்படுகின்றது. இப்படியான நிலையில், திருவான்மியூரில் அவர்கள் வசிக்கும் வீட்டில், மகள் சித்ராவின் துப்பட்டாவில் காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது தற்கொலை தொடர்பாக, திருவான்மியூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றது. இந்த சம்பவம் சித்ராவின் ரசிகர்களையும், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தற்கொலை தீர்வல்ல.. : மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவி மையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


Click it and Unblock the Notifications











