Parasakthi Box office: உலகளவில் ‘பராசக்தி‘ படம் செய்துள்ள வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியான நிலையில், படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று அதாவது ஜனவரி 10ந் தேதி தியேட்டரில் வெளியானது. அதில், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்டோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமாரின் 100வது படமான இப்படத்தில் பாடல்களை சும்மா அதிரவிட்டுள்ளார்.

பராசக்தி: முன்னதாக இப்படம் ஜனவரி 14ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் படம் ஜனவரி 10ந் தேதி வெளியாகும் என படக்குழு அறவித்தது. ஆனால், படத்திற்கு தணிக்கைக்குழு சான்றிதழ் வழங்க தாமதமானதால், படம் வெளியாகுமா... ஆகாதா என்ற குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, சென்சாரில் இந்தப் படத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மாற்றம் செய்யப்பட்டு நேற்று வெளியானது. இப்படம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் கதையை பொறுத்தவரை, செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ள சிவகார்த்திகேயன், தம்பி அதர்வாவை பாட்டியின் அரவணைப்பில் வளர்த்து வருகிறார். அரசு வேலையில் இருக்கும் செழியன் தம்பிக்காக தான் உண்டு, தன் வேலை உண்டு என இருக்கிறார்.
கலவையான விமர்சனம்: ஆனால், கல்லூரி மாணவனாக இருக்கும் சின்னதுரை (அதர்வா) வெளியே தெரியாமல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்கிறார். ஒரு கட்டத்தில் சின்னதுரையின் செயல்பாடுகளை செழியன் சிவகார்த்திகேயன் கண்டுபிடித்து கண்டிக்கிறார்.ஆனால் அதர்வா தன்னுடைய கொள்கையில் தீவிரமாக இருக்கிறார். அந்த நேரத்தில் இந்தியை எதிர்க்கும் போராட்டக்குழுக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. இதில் சின்னத்துரை உயிர்தப்பினாரா? அவரின் கொள்கை நிறைவேறியதா? என்பது தான் பராசக்தி படத்தின் கதை.
அதிகாரப்பூர்வ வசூல்: இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது பாக்ஸ் ஆபிஸில் ஒரு பிரம்மாண்டமான தொடக்கம் என பதிவிட்டுள்ளது. இனி வரும் நாட்கள் தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் படத்தின் வகுல் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











