Parasakthi: இதெல்லாம் நல்லதுக்கில்ல.. விஜய் ரசிகர்களின் ஓவர் ஆட்டம்.. விளாசி விட்ட பராசக்தி நடிகர்
சென்னை: கடந்த வாரம் இந்த பொங்கல் அண்ணன் - தம்பி பொங்கல் என்றுதான் அதாவது ஜன நாயகன் - பராசக்தி பொங்கல் தான் என மொத்த கோலிவுட்டும் நினைத்துக் கொண்டு இருந்தது. ஆனால் ஜன நாயகன் படக்குழுவுக்கு சென்சார் கிடைப்படத்தில் பிரச்னைகள் ஏற்பட்டதால் காட்சிகள் மாறிவிட்டது. அதாவது ஜன நாயகன் ரிலீஸ் ஆகவில்லை. பராசக்தி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு உள்ளது. இப்படி இருக்கையில் பராசக்தி படத்திற்கு பொய் விமர்சனங்களை திட்டமிட்டு பரப்பும் வேலையை குறிப்பிடத்தக்க அளவிலான விஜய் ரசிகர்கள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் பராசக்தி படத்தில் நடித்த நடிகர் தேவ் ராம்நாத் தனது எக்ஸ் பக்கத்தில் பொய் விமர்சனங்களைப் பரப்பும் விஜய் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது நடிகர் தேவ் ராம்நாத் தனது எக்ஸ் பக்கத்தில், " பராசக்தி படத்தை உங்கள் படத்துடன் சேர்ந்து வெளியிடுகிறோம் என்ற காரணத்திற்காக எங்கள் படத்தை நாசம் செய்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நாங்கள் தான் முதலில் படத்தின் ரிலீஸ் தேதியை தீர்மானித்து அதை அறிவித்தோம். நாங்கள் உங்கள் படத்தை நிறுத்த முயற்சித்தோமா? அப்படி எல்லாம் எங்கள் சிந்தனையிலேயே இல்லை.

பெரும் போராட்டம்: படத்திற்கு சென்சார் தரப்பில் போடப்பட்ட தடைகளை கடந்து படத்தை ரிலீஸ் செய்யும் போராட்டத்தில் நான் சென்னை மற்றும் மும்பை CBFC அலுவலகத்தில் இருந்தேன். இன்னும் சொல்லப்போனால் உங்கள் படக்குழு எப்படி படத்திற்கு சென்சார் வாங்கி படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முயற்சித்ததோ, அதே வழியில் படத்தை ரிலீஸ் செய்ய நாங்கள் முயற்சித்தோம். படத்தின் ரிலீஸ்க்கு 18 மணி நேரங்களுக்கு முன்னர் தான் சென்சார் சான்றிதழே எங்களுக்கு கிடைத்தது.
சதி வேலை: திட்டமிட்ட எதிர்மறையான விமர்சனங்கள், பழைய வீடியோக்களை திட்டமிட்டே பரப்புவது, மக்கள் மத்தியில் படத்திற்கு நெகடிவ் விமர்சனத்தை உருவாக்குவது, திரையரங்குகளில் அரசியல் கோஷங்களை எழுப்புதல், புக் மை ஷோ ரேட்டிங்கில் குழப்பத்தை உருவாக்குகிறீர்கள். இது போட்டி அல்ல, கடந்த ஆண்டு இதே போன்று ஒரு பெரிய படத்திற்கும் நீங்கள் இதையேதான் செய்தீர்கள்.ஒரு சினிமா ஆர்வலராக சொல்கிறேன், இப்படியான நடவடிக்கைகள் யாருக்கும் நல்லதில்லை. பராசக்தி என்பது தமிழர்கள் நாம் பெருமைப்பட வேண்டிய, ஒரு மாணவர் இயக்கத்தைப் பற்றியது. எங்கள் மாணவர்கள் எப்படி போராடினார்களோ, அதேபோல் நாங்களும் இதை எதிர்த்துப் போராடுவோம்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுடன் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











