சிவகார்த்திகேயன் நடிச்சாலே ஹிட்டுதான்.. பராசக்தி ஆடியோ லான்ச்சில் மெகா ஹிட் பட இயக்குநர் பேச்சு
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் பராசக்தி படம் ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதற்கு முந்தைய நாள் ஜனநாயகன் வெளியானாலும்; இப்படத்தின் மீது உச்சக்கட்ட நம்பிக்கையை ரசிகர்களும், படக்குழுவினரும் வைத்திருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க சென்னையில் பராசக்தி இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்துவருகிறது. அதில் லப்பர் பந்து பட இயக்குநர் பேசியது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் பராசக்தி. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரிக்க; ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது சிவகார்த்திகேயனுக்கு 25ஆவது படம் என்பது கூடுதல் சிறப்பு. படமானது முதலில் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் நான்கு நாட்களுக்கு முன்னதாக பத்தாம் தேதி வெளியாகிறது.
பெரிய நம்பிக்கை: இப்படத்தின் மீது ஒட்டுமொத்த படக்குழுவும் பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறது. படத்தின் அவுட் லைன் மொழி போர் பற்றியது என்பதால் திரைத்துறையினரும் பராசக்தி மீது அதீத எதிர்பார்ப்பை கொண்டிருக்கிறார்கள். என்ன மாதிரியான விவாதங்கள் பட ரிலீஸுக்கு பிறகு நடக்கப்போகிறது; சிவகார்த்திகேயனின் கரியரில் அமரனுக்கு அடுத்ததாக தவிர்க்க முடியாத படமாக இது இருக்குமா என எக்கச்சக்க கேள்விகளும் அவர்களிடம் எழுந்திருக்கிறது.

இசை வெளியீட்டு விழா: சூழல் இப்படி இருக்க சென்னையில் இன்று பராசக்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள். வெற்றிமாறன், மிஷ்கின், மணிரத்னம், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள். ஏராளமான ரசிகர்கள் சிவகார்த்திகேயனை பார்த்து கரகோஷம் எழுப்பினார்கள். இந்நிலையில் விழாவில் லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பேசியது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
என்ன பேசினார்?: அவர் பேசுகையில், "எனக்கு சிவகார்த்திகேயனை எட்டு வருடங்களாக தெரியும். அவர் தயாரித்த கனா படத்தில் நான் உதவி இயக்குநர். அவர் படம் நடித்தாலே அது ஹிட்தான். அதைவிடவும் அந்தப் படத்தில் நிச்சயமாக கதை இருக்கும். அதற்கு உதாரணம் கனாதான். முதலில் அவரிடம் அந்தப் படத்தின் கதையை சொன்னபோது நிறைய பில்ட் அப் செய்துவிட்டோம். படத்தின் இடைவேளை காட்சி அவரை மையப்படுத்திதான் இருந்தது.
அவர் ரிஜெக்ட் செய்துவிட்டார்: நிறைய சீன்களை சேர்த்திருந்தோம். ஆனால் அதை அவர் நிராகரித்துவிட்டார். எனக்கு இரண்டாவது பாதி சுத்தமாக பிடிக்கவில்லை. ஏன் என்றால் இதை நீ எனது படமாக மாற்றிவிட்டாய். இந்தப் பட்த்தில் சத்யராஜ்தான் ஹீரோ. ஐஸ்வர்யா ராஜேஷ்தான் ஹீரோயின் என சொன்னார். அதற்கு பிறகு எட்டு வெர்ஷன்கள் வேலை செய்தோம். அவரால்தான் அந்தப் படம் ஒரு இயக்குநரின் படமாக வந்தது" என்றார். மேலும் ரவி மோகன் பற்றி பேசுகையில், "ரவி மோகன் சார் நீங்கள் போல்டாக முன்வந்து இந்தப் படத்தில் நடித்தது சூப்பர். நீங்கள் மட்டும்தான் இன்னும் முதல் பட இயக்குநர்களிடம் கதை கேட்கிறீர்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











