Parasakthi Box Office Day 5 - பராசக்தி 5வது நாள் வசூல்..ஆப்பு வைத்த வா வாத்தியார்?..பாக்ஸ் ஆஃபிஸ் ரேஸ் ஓவரோ?
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் கடந்த பத்தாம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியானது. முதன்முறையாக எஸ்கேவும், சுதாவும் சேர்ந்திருந்ததால் பெரிய எதிர்பார்ப்பை படம் பெற்றது. ஆனால் படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. இந்நிலையில் படத்தின் ஐந்தாவது நாள் வசூல் குறித்த தகவல் இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது.
சூரரைப் போற்று படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கியிருக்கும் படம் பராசக்தி. இதில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இதில் ரவி முதன்முறையாக வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது அவருக்கு நூறாவது படமாகும். டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார்.
சுமாரான வரவேற்பு: படமானது கடந்த பத்தாம் தேதி வெளியானது. ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் தமிழ்நாட்டில் நடத்திய போராட்டத்தை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டிருந்ததால்; கண்டிப்பாக தரமான சம்பவத்தை படம் செய்யும் என்று பலரும் நினைத்தார்கள். அதை முடிந்த அளவு செய்ய இயக்குநர் முயற்சி செய்திருந்தாலும்; உணர்வுப்பூர்வமான கதையில் காதல் காட்சிகள் உள்ளிட்ட சில விஷயங்களை வைத்து சுதா மடைமாற்றிவிட்டார். இதனால் முழுவதுமாக படம் கனெக்ட் ஆகவில்லை என ரசிகர்கள் ஓபனாக கூறினார்கள்.

சிவாவுக்கு முக்கியமான படம்: படத்துக்கு அப்படி இப்படி விமர்சனங்கள் வந்தாலும் சிவகார்த்திகேயனின் நடிப்பு இதிலும் கொண்டாடப்படுகிறது. அமரன் படத்துக்கு பிறகு பராசக்தி கண்டிப்பாக பெரிய இடத்தை அவரது கரியரில் பிடிக்கும் என ரசிகர்கள் கணித்திருக்கிறார்கள். அதேபோல் ரவி மோகனின் வில்லத்தனமான நடிப்புக்கும் தியேட்டர்களில் அப்ளாஸ் கிடைத்தன. இதனால் எஸ்கேவும், ரவி மோகனும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில்தான் இருப்பார்கள்.
வசூல் விவரம்: இது ஒருபக்கம் இருக்க படம் வெளியாகி இரண்டு நாட்களில் 51 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூலித்துவிட்டதாக தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் பாக்ஸ் ஆஃபிஸ் கணக்குகளை வெளியிடும் Sacnilk இணையதளம் பராசக்தி படத்தின் ஐந்தாவது நாள் வசூல் குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி நேற்று அந்தப் படமானது இந்தியாவில் 2.35 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆப்பு வைத்த வா வாத்தியார்?: இது சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. நேற்று கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் படம் வெளியானது. எனவே பாதி கூட்டம் அங்கே சென்றுவிட்டது. இதன் காரணமாக நேற்று பராசக்தியின் வசூல் டல்லடித்திருக்கலாம் என தெரிகிறது. அதேபோல் இன்று ஜீவா நடித்திருக்கும் தலைவர் தம்பி தலைமையில் படம் வருகிறது. நேற்று படம் பார்த்த பத்திரிகையாளர்கள் எல்லாம் படத்தை கொண்டாடுகிறார்கள். எனவே இன்றிலிருந்து பராசக்தி வசூலுக்கு தலைவர் தம்பி தலைமையிலும் ஆப்பு வைக்குமோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. ஆகமொத்தம் இன்னும் சில நாட்களில் பாக்ஸ் ஆஃபிஸ் ரேஸிலிருந்து பராசக்தி விலகிவிடுமோ என்ற கருத்துதான் எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











