பெண்கள்னா குறைச்சலா?.. ஒழுங்கா சம்பளத்தை கொடுங்க.. விட்டு விளாசும் பராசக்தி இயக்குநர் சுதா கொங்கரா
சென்னை: சூரரைப் போற்று படத்தை இயக்கி பெரிய வெற்றி பெற்றவர் சுதா கொங்கரா. அந்தப் படம் மெகா ஹிட்டானதோடு மட்டுமின்றி சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இப்போது அவர் சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி படத்தை இயக்கியிருக்கிறார். நாளை ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து சுதா பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மணிரத்னம், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த சுதா கொங்கரா துரோகி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார்.ஸ்ரீகாந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் லீடு ரோலில் நடித்திருந்த அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் சுதாவின் திரைமொழி முதல் படத்திலேயே ஈர்த்துவிட்டது. அந்தப் படத்துக்கு பிறகு மாதவன், ரித்திகா சிங் உள்ளிட்டோரை வைத்து இறுதிச்சுற்று படத்தை இயக்கி சூப்பர் ஹிட் இயக்குநர் என்ற பெயரை பெற்றார்.
தேசிய விருது: இறுதிச்சுற்று படத்துக்கு பிறகு சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்டோரை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கினார். அந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. சுதா கொங்கரா, சூர்யா, ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் தேசிய விருதையும் வென்றார்கள். அப்படத்தின் வெற்றி சுதாவை இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநராகவும் மாற்றியது. எனவே அப்படத்தை ஹிந்தியிலும் அவரே இயக்கினார். ஆனால் படத்துக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை.

சுதா கொங்கராவின் பராசக்தி: இப்போது அவர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோரை வைத்து பராசக்தி படத்தை இயக்கியிருக்கிறார். 60களில் தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்தி இப்படத்தை இயக்கியிருக்கிறார் அவர். இந்தப் படத்தின் சப்ஜெக்ட்டும் சென்சேஷனல் ஆனது என்பதால் இதன் மீது அனைவரிடமும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. நாளை ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்சார் இன்னும் கிடைக்கவில்லை: இதனால் எஸ்கே ரசிகர்களை நாளைய தினத்துக்கு ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். ஆனால் இன்னமும் சென்சார் அதிகாரிகள் சான்றிதழை கொடுக்கவில்லை. பேரறிஞர் அண்ணா தொடர்பான காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என அவர்கள் கூறியிருப்பதாகவும்; அதற்கு இயக்குநர் திட்டவட்டமாக மறுத்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. இந்நிலையில் சுதா கொங்கராவின் பேட்டி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சுதா கொங்கராவின் பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஆண்களுக்கு 500 கோடி ரூபாய் கொடுத்தால் எனக்கு ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்கள். அங்கே நூறு கோடி ரூபாய் கொடுத்தால் எனக்கு 200 கோடி ரூபாய் கொடுங்கள். ஆனால் அது இங்கு இல்லை. அங்கே 100 கோடி ரூபாய் கொடுத்தால் அதே படத்துக்கு எனக்கு 50 கோடி ரூபாய்தான் கொடுகிறீர்கள். என்னுடைய சம்பளம் ரொம்ப ரொம்ப குறைவு. நான் அதற்காக சண்டை செய்கிறேன்.
நானும் அதே அளவுதான் வேலை: அவர்கள் அளவுக்குத்தான் நான் வேலை செய்கிறேன். நானும் பெரிய படங்கள்தான் செய்கிறேன். என்னுடைய படத்தையும் பார்க்கத்தான் வருகிறார்கள். கஷ்டப்பட்டுத்தான் நான் எடுக்கிறேன். ஆனால் எனக்கு ஏன் கம்மியான சம்பளம் கொடுக்கிறீர்கள். அதனை நான் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால் நிறைய படங்களை நான் விட்டிருக்கிறேன். நடிகரால்தான் உள்ளே வருகிறார்கள் என சொல்கிறீர்கள். அப்போ இயக்குநருக்கு என்ன சொல்வீர்கள். எனக்கே தெரியும் ஒரு நடிகையின் படம் ஆண் நடிகரின் படத்தைவிட அதிகம் வசூலித்தது. ஆனாலும் நடிகர் வாங்கும் சம்பளத்தில் நான்கில் ஒரு பங்குதான் அந்த நடிகை வாங்குகிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











