பொங்கல் பந்தயம் ஆன்.. விஜய்யோடு மோதுவதை உறுதி செய்த சிவகார்த்திகேயன்?.. சுதா கொங்கராவும் செம கான்ஃபிடன்ஸ்
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தேதியை குறிப்பிடாமல் பொங்கலுக்கு ரிலீஸ் என்றே ப்ரோமோஷனில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா படத்தின் ரிலீஸ் பற்றி பேசியிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
சூரரைப் போற்று படத்தை இயக்கி கமர்ஷியல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அப்ளாஸை அள்ளியவர் சுதா கொங்கரா. அந்தப் படத்துக்காக தேசிய விருதையும் வென்றிருந்தார். அவர் சூர்யாவை வைத்து இயக்குவதாக இருந்தப் படம் நடக்காததால்; சிவகார்த்திகேயனை வைத்து அதே படத்தை பராசக்தி என்ற பெயரில் இயக்கியிருக்கிறார். இதில் சிவாவுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100ஆவது படம் இதுவாகும்.
தரமான சம்பவம் உறுதி: ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிரிழந்த மாணவர்களை அடிப்படையாக வைத்து இக்கதையை கட்டமைத்திருக்கிறார் சுதா. இந்தக் காலத்தில் இப்படி ஒரு கதையை சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்ததற்காகவே சுதாவை பாராட்டலாம் என்று திரைத்துறையினர் கூறுகிறார்கள். இப்படம் தமிழ்நாட்டில் பெரிய அளவிலான விவாதங்களை கிளப்பும், திராவிட இயக்கங்களின் போராட்டங்கள், திராவிட சித்தாந்தத்தின் வலிமை உள்ளிட்டவைகளை உணர்த்தும் வகையில் இருக்கும் என்பதும் பலரது கருத்து.

ரிலீஸ் தேதி: இப்படி படத்துக்கு எக்கச்சக்க ஹைப் இருக்கிறது. முதலில் இப்படம் பொங்கலுக்கு வரும் சொல்லப்பட்டது. ஆனால் விஜய்யின் ஜனநாயகன் ஜனவரி ஒன்பதாம் தேதி வருவதால் 14ஆம் தேதிக்கு தள்ளிப்போனது. இப்போதோ நிலைமை தலைகீழாக இருக்கிறது. அதாவது 14ஆம் தேதிக்கு முன்னதாகவே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கடந்த சில நாட்களாக குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.
சுதா கொங்கரா பேட்டி: சூழல் இப்படி இருக்க பராசக்தி படத்தின் செட்டை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் படக்குழு காட்சிப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் சுதா கொங்கரா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி என்னவென்று கேட்கப்பட; பொங்கலுக்கு ரிலீஸ்; தேதியை தயாரிப்பாளர்கள் சொல்வார்கள் என்று மட்டும் கூறினார். இதற்கு முன்னர் வந்த போஸ்டரில் எல்லாம் ஜனவரி 14 ரிலீஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் இப்போது இயக்குநரே பொங்கல் ரிலீஸ் என்று மட்டும்தான் சொல்லியிருக்கிறார்.
உறுதியான போட்டி?: சுதாவின் இந்த பதிலை வைத்து பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது 14ஆம் தேதிக்கு முன்னரே ஜனநாயகனுக்கு போட்டியாக பராசக்தி வருகிறது என்பதைத்தான் மறைமுகமாக சொல்கிறாரோ என கேட்கிறார்கள். கண்டிப்பாக ஜனநாயகன் Vs பராசக்தி போட்டிதான் பொங்கலுக்கு எனவும் அடித்து சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். முன்னதாக, விஜய்யோடு மோதி தன்னுடைய மாஸை பரிசோதிக்கவும், நிரூபிக்கவும் சிவகார்த்திகேயன்தான் பராசக்தியை போட்டியாக களமிறக்க சொன்னதாக ஒரு தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











