Parineeti Chopra Marriage - அரவிந்த் கெஜ்ரிவால் முன்பு திருமணம்.. காதலரை கரம் பிடித்த பரிணிதி சோப்ரா
டெல்லி: Parineeti Raghav Wedding (பரிணிதி சோப்ரா திருமணம்) பாலிவுட் நடிகை பரிணிதி சோப்ரா தனது காதலரான ராகவ சத்தாவை இன்று திருமணம் செய்துகொண்டார்.
பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ராவின் தங்கை பரிணிதி சோப்ரா. 2011ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சாம்கிலா, கச்சுலா கில் உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். பாலிவுட்டில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு பட வாய்ப்புகள் திடீரென குறைந்தன. இதனையடுத்து டிவியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தன்னை பிஸியாக வைத்திருந்தார்.

காதல்: இந்த சூழலில் பரிணிதி சோப்ரா, ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சத்தாவை காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டுவந்தது. ஆனால் இரண்டு பேரும் தங்களது காதலை வெளியில் சொல்லாமல் மௌனம் சாதித்துவந்தனர். அதனையடுத்து ஒருகட்டத்தில் நாங்கள் காதலிக்கிறோம் என்று கூறினர்.
களைகட்டிய நிச்சயதார்த்த விழா: பரிணிதி சோப்ராவுக்கும், ராகவ்வுக்கும் சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் கலந்த்கொண்டனர்.. ராகவ் எம்.பி என்பதால், அந்த நிச்சயதார்த்தத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
திருமணம்: நிச்சயதார்த்தம் முடிவடைந்த சூழலில் எப்போது திருமணம் என்று தெரியாமல் இருந்தது. இதனையடுத்து செப்டம்பர் 24ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணம் நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், எம்.பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிற பிரபலங்கள்: இவர்களைத் தவிர்த்து டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, ப்ரியங்கா சோப்ராவின் தாய், நடிகை பாக்யஸ்ரீ, டிசைனர் மனிஷ் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால் நடிகை ப்ரியங்கா சோப்ரா இதில் கலந்துகொள்ளவில்லை. அதேசமயம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரிணிதி சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா.
இன்று இரவு வரவேற்பு: இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு நிறைய பேருக்கு அழைப்பு விடுக்கவில்லை. இன்று இரவே வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது. திருமணத்தில் பரிணிதி சோப்ரா அதிக மேக்கப்போ, மெஹந்தியோ போட்டுக்கொள்ளாமல் பார்க்க ரொம்பவே சிம்ப்பிளாக இருந்தார். அதேபோல் மனீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்திருந்த உடையை மணமக்கள் அணிந்திருந்தனர். இவர்களது திருமணத்துக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











