சூர்யா கார்த்தி மட்டுமில்லை.. திருப்பதி லட்டு வீடியோவை டெலிட் செய்த பரிதாபங்கள் டீம்!
சென்னை: ஆந்திரா மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுமே தற்போது மிகவும் பரபரப்பாக பேசி வரும் விஷயம் திருப்பதி லட்டில் பசுவின் நெய்யுடன் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது என்பதுதான். இது அரசியல் தளத்தில் மட்டும் இல்லாமல் சினிமா, சமூகவலைதளங்கள் என அனைத்து இடத்திலும் எதிரொலித்துக் கொண்டு உள்ளது. குறிப்பாக மெய்யழகன் படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றபோது, நடிகர் கார்த்தி லட்டு குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்ததும் சர்ச்சையாக மாறியது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக உள்ள யூடூயூப் சேனல்களில் பரிதாபங்கள் சேனலும் ஒன்று. இந்த சேனலில் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதை மைய்யமாகக் கொண்டு நகைச்சுவையாக வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ தற்போது டெலிட் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக்கொழுப்பு, மீன் எண்னெய் மற்றும் பன்றிக் கொழுப்பு போன்றவை கலக்கப்பட்டிப்பதாக தெரிவித்தார். இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் தங்களது அதிர்ச்சியையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், மெய்யழகன் படத்திற்கான புரமோஷனுக்காக ஆந்திராவுக்கு சென்றிருந்த நடிகர் கார்த்தியிடம் திடீரென தொகுப்பாளினி, சிறுத்தை படத்தில் வரும் கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற டெம்ப்ளேட்டை திரையில் காட்டி, லட்டு பற்றி கேள்வி எழுப்ப, அது மிகவும் சென்சிடிவான விஷயம் லட்டு பற்றி பேச மாட்டேன் எனக் கூறினார் நடிகர் கார்த்தி. பவன் கல்யாண் லட்டு பற்றி யாரும் வேடிக்கையாக கூட பேசக் கூடாது என எச்சரித்தார். இதையடுத்து, உடனடியாக கார்த்தி மன்னிப்பும் கோரினார். கார்த்தியின் மன்னிப்புக்கு பவன் கல்யாண் பதில அளிக்க, பவன் கல்யாணின் பதிலுக்கு கார்த்தி மற்றும் சூர்யா என இருவரும் நன்றி தெரிவித்தனர்.
வீடியோ டெலிட்: இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, பரிதாபாங்கள் யூடூயூப் சேனலில் திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக நகைச்சுவையாக வீடியோ வெளியிடப்பட்டது. குறிப்பாக 15 நிமிடங்கள் கால அளவு கொண்ட அந்த வீடியோவில், ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாணை பங்கமாக கலாய்த்திருந்தனர். இந்நிலையில் அந்த வீடியோவை பரிதாபங்கள் யூடூயூப் சேனலில் இருந்து அந்த வீடியோவை டெலிட் செய்துள்ளனர். இதுமட்டும் இல்லாமல், அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது தொடர்பாகவும் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளனர். அதாவது, “ கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைகாக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருந்தால், அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கியுள்ளோம்.
அதிருப்தி: இதுபோல் வரும் காலங்களில் நடைபெறாது எனவும் தெரிவித்துக் கொள்கின்றோம்” என தெரிவித்துள்ளனர். பரிதாபங்கள் டீம் வீடியோவை டெலிட் செய்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கார்த்தி மன்னிப்புக் கேட்டது, அதன் பின்னர் பவன் கல்யாணின் போஸ்ட்டுகு அவர்கள் நன்றி கூறியதைத் தொடர்ந்து பரிதாபங்கள் யூடூயூப் சேனலும் தங்களது வீடியோவை டெலிட் செய்துள்ளது என்பது பலருக்கும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











