திரிஷாவை பற்றி அப்படி சொன்னதும் கை தட்டியதே விஜய் ரசிகர்கள்தான்.. வருத்தம் தெரிவித்த பார்த்திபன்
சென்னை: விஜய்யுடன் திரிஷா சில நாட்களுக்கு முன்பு திருமணம் ஒன்றுக்கு ஒரே கலர் டோனில் உடைகள் அணிந்தபடி; ஒரே காரில் வந்திருந்தார். இரண்டு பேரும் அப்படி வந்தது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. பலரும் திரிஷாவுக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவு செய்துவருகிறார்கள். விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பார்த்திபனும் இதுகுறித்து பேச; அதற்கு திரிஷா எதிர்வினையாற்றியிருக்கிறார். இந்நிலையில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டிருக்கிறார் பார்த்திபன்.
சங்கீதா தாக்கல் செய்திருக்கும் விவாகரத்து மனுவில் அவர் கூறியிருக்கும் நடிகை திரிஷாவாக இருக்குமோ என்று பலரும் சந்தேகப்பட்டார்கள். அந்த சந்தேகங்களுக்கு எல்லாம் வலு சேர்க்கும் விதமாக விஜய்யும், திரிஷாவும் ஒரே காரில்; ஒரே நிறத்திலான உடையை அணிந்து வந்து மணமக்களை வாழ்த்தி; ஃபோட்டோவுக்கும் போஸ் கொடுத்தார்கள். டைவர்ஸ் பிரச்னை பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலைமையில் இதெல்லாம் தேவைதானா தளபதி என்று விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் கடுப்பாகிவிட்டார்கள்.

திரைத்துறையிலும் கண்டனங்கள்: ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையிலும் இந்த விஷயத்தை சிலர் விரும்பவில்லை. இயக்குநர் சமுத்திரகனி சில நாட்களுக்கு முன்பு இயக்குநர்கள் பாலா மற்றும் ஆர்.வி. உதயகுமாரிடம் இவ்விஷயத்தை குறிப்பிட்டு, 'எதுவாக இருந்தாலும் நான்கு சுவற்றுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியதுதானே. யாரை பழி வாங்க இதை செய்ய வேண்டும். எல்லாம் நல்லபடியாக வந்துகொண்டிருந்தது. இப்போது கட்சிக்காரனே இனிமேல் எங்களால் முட்டு கொடுக்க முடியாது என சொல்கிறார்கள்' என்றிருந்தார்.
பார்த்திபனின் பேச்சு: தொடர்ந்து இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் திரிஷாவின் புகைப்படத்தை காண்பித்து பேசும்படி பணித்தார்கள். அதற்கு இவரோ விஜய் - திரிஷாவின் ஜோடியான வருகையை மனதில் வைத்துக்கொண்டு, 'குந்தவையை குந்த வையுங்கள்.. அதாவது இந்தக் குந்தவையை வெளியே வராமல் கொஞ்ச நாளுக்கு வீட்டுக்குள்ளேயே குந்த வைப்பது நல்லது. நிறைய பிரச்னைகளை உண்டாக்காமல் இருக்கலாம். சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர்த்து கவிதை சொல்லாமல் இருப்பது பெட்டர் என்று நினைக்கிறேன்' என்றிருந்தார்.
திரிஷா கண்டனம்: அவரது இந்தப் பேச்சுக்கு திரிஷா தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். நேற்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "எனது பெயரையும், புகைப்படத்தையும் காட்டப்படுவதாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கூறினார். உதவியாளர் மூலம் அந்த கோரிக்கை வந்தது. கடைசி நேரத்தில் எனது பெயரும், புகைப்படமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. மைக்கில் ஒரு கருத்தினை கூறுவதால் அது புத்திசாலித்தனமானதாகவோ அல்லது நகைச்சுவையாகவோ மாறிவிடாது. அது முட்டாள்த்தனமாக பேசப்படுவதை இன்னும் அதிகம் கேட்க செய்யும். அறிவு இல்லாமல் மரியாதையில்லாமல் வார்த்தைகளை பேசுவது, அந்த வார்த்தைகள் யாரை நோக்கி சொல்கிறார்களோ அவர்களது குண நலனை காட்டாது. பேசுபவரின் குணநலனையே காட்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
பார்த்திபன் வருத்தம்: இந்நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் பார்த்திபன். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது இதில். வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை' என குறிப்பிட்டு குரல் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், 'சில நேரங்களில் சில தவறுகள் நோக்கமின்றி நிறைவேறிவிடுகின்றன. அந்த நிகழ்ச்சியில் ரேப்பிட் ஃபயர் போல கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கும் சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னபோது; திரிஷாவின் புகைப்படத்தை காண்பித்தார்கள். என்ன சொல்லலாம் என யோசிக்கையில் குந்தவை குந்த வை என குரல் எழுப்பினார்கள்.
விஜய் ரசிகர்கள்: உடனே வார்த்தை ஜாலத்துக்காக மட்டுமே குந்தவையை வீட்டிலேயே குந்த வைக்கவும்; பிரச்னை வராமல் இருக்க என கூற; அரங்கமே கை தட்டியது. பெரும்பாலும் விஜய் ரசிகர்கள். இறங்கி வந்ததும் நண்பர் ரங்கராஜ் பாண்டே, 'குந்தவை' என்பதை தவிர்த்திருக்கலாம் என கூறினார். உடனே நான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இதை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டேன். ஆனால் யாரோ எடுத்த வீடியோ வெளியாகிவிட்டது. சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனது வருத்தத்தையும் மனப்பூர்வமாக கேட்டுக்கொள்கிறேன். பிரச்னைகள் பெரிதாவதை நான் என்றுமே விரும்புவதில்லை. நான் கல்லூரிகளுக்கு சென்று பேசையில் பெண் சுதந்திரம் பற்றியே பேசுகிறேன். ஆண், பெண் பாகுபடின்றி அனைவரும் தேவையற்ற கட்டுப்பாடுகளை விவாகரத்து செய்துவிட்டு சுதந்திரத்தை கைப்பிடித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பவன் நான். எனவே பெண்ணே இப்பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் ஆக்க சக்தி" என்று தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications















