250 கோடிக்கு இல்லை.. 2500 கோடி தான் இலக்கு.. விஜய் அரசியல் குறித்து பார்த்திபன் சொன்ன விஷயம்!
சென்னை: நடிகர் விஜய் 200 முதல் 250 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நடிகராக உள்ள நிலையில், அதையெல்லாம் விட்டு விட்டு அரசியலுக்கு வருவதை பார்த்து அவர் கொஞ்சம் அவசரப்படுகிறாரோ என நினைத்தேன் என பார்த்திபன் பேசியுள்ளார். மேலும், எம்ஜிஆர், சூப்பர் ஸ்டாரின் அரசியல் அறிவிப்பு குறித்தும் விஜய்யின் அரசியல் அறிவிப்பு குறித்தும் பார்த்திபன் பேசியுள்ளார்.
பார்த்திபன் இயக்கியுள்ள டீன்ஸ் திரைப்படம் ஜூலை 12ம் தேதி கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படத்துடன் போட்டியாக ரிலீஸ் ஆகிறது. ஆயிரம் தியேட்டர்களில் கமல் படம் வெளியாகிறது என்றும் தனது படம் குறைவான தியேட்டர்களிலேயே வெளியாகிறது என பார்த்திபன் கூறினார்.

டீன்ஸ் படத்தின் புரமோஷனுக்காக பேசி வரும் பார்த்திபன் தனது காதல், திருமணம், விவாகரத்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றியும் பேசி வருகிறார். நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியது விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மார்கெட் இழந்த எம்ஜிஆர்: மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் எல்லாம் எம்ஜிஆருக்கு ஓடவே இல்லை. அதன் பின்னர் தான் முழு நேர அரசியல்வாதியாகவே எம்ஜிஆர் மாறுகிறார். ஆரம்பத்தில் இருந்தே அரசியலில் இருந்தாலும், சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வந்தார் எம்ஜிஆர். ஆனால், விஜய் 250 கோடி சம்பளம் வாங்கும் ஹீரோவாக இருக்கும் போது அதையெல்லாம் விட்டு விட்டு அரசியலுக்கு முழு நேர அரசியல்வாதியாக வந்து மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக அதை வரவேற்கத்தான் செய்ய வேண்டும் என்றார்.
2500 கோடி இலக்கு: இப்படி நான் சொன்னால், உடனடியாக அதிமுகவினர் சண்டைக்கு வந்து விடுவார்கள். சோஷியல் மீடியாவில் எனக்கு எதிரான கருத்துகள் குவியும். 250 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டு விட்டு விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று நான் சொன்னால், விவரம் தெரியாத ஆளாக இருக்கீங்களே அவர் அரசியலுக்கு வருவதே 2500 கோடி சம்பாதிக்கத்தான் என ஒரு சிலர் தங்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர். அது வேறு கோணத்திலான கருத்து, அதை வரவேற்கலாம். அதை விவாதிக்கலாம். ஆனால், வெறுமனே திட்டுபவர்களை கண்டுக் கொள்ளக் கூடாது என பார்த்திபன் பேசியுள்ளார்.
அவசரப்படுகிறாரோ விஜய்: தம்பி விஜய்யை இன்னமும் ஒரு 28 வயது இளைஞராகத்தான் நான் பார்க்கிறேன். அப்படித்தான் அவரது தோற்றம், வேகம் எல்லாம் இருக்கிறது. கமல்ஹாசன் அரசியலுக்கு வரும் போது அவரது அறிவு, ஞானம், அனுபவம் என அனைத்தையும் வைத்துக் கொண்டு அரசியலுக்குள் நுழைந்தார். சிரஞ்சீவி அரசியலுக்கு வந்த போது அவர் மீது அழுகிய முட்டை எல்லாம் அடித்தார்கள். ஏகப்பட்ட ட்ரோல்கள், தேவையற்ற பேச்சுகள், ஏச்சுகள் குவியும். ஆனால், இதையெல்லாம் சமாளித்து விடலாம் என்கிற பக்குவத்துடன் விஜய் அரசியலுக்குள் நுழைய காரணம் சம்பாதிக்கும் நோக்கம் எல்லாம் இல்லை. 200 கோடியை பார்த்தாச்சு, ஹீரோவாக பல படங்கள் நடிச்சாச்சு. ஆனால், ரியல் ஹீரோ யாரு, மக்களுக்கு உதவுபவர்கள் தான் என்பதை புரிந்துக் கொண்டு ரியல் ஹீரோவாக வேண்டும் எண்ணத்தில் தான் விஜய் அரசியலுக்கு வருகிறார் என நினைக்கிறேன். அவருக்கு எனது பாராட்டுக்கள் என பார்த்திபன் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











