கதை திரைக்கதை வசனம் இயக்கம் பார்ட் 2க்கு பார்த்திபன் ரெடி.. பெயர் உப்புமா கம்பெனி!
கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தின் வெற்றிக்கு இடையே இந்தப் படத்தின் பார்ட் 2 எடுக்க தயாராகிவிட்டார் பார்த்திபன். படத்தின் பெயர் உப்புமா கம்பெனி என்று அவரே தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார் இயக்குநர் பார்த்திபன். புதியபாதை மூலம் தமிழ்சினிமாவில் புதிய பாதை ஏற்படுத்திய பார்த்திபன், பொண்டாட்டி தேவை படத்தில் பெண்களின் உள்ளம் கவர்ந்தார்.
தொடர்ந்து அவர் இயக்கிய படங்கள் பெண்களுக்கானதாக இருக்கவில்லை. அவர் நடித்த பாரதி கண்ணம்மா, வெற்றிக்கொடி கட்டு அனைத்து தரப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. இயக்குநராகவும், நடிகராகவும் வெற்றிபெற்ற பார்த்திபன் ஒரு கால கட்டத்தில் வெற்றியை ருசிக்க முடியாமலேயே போய்விட்டது.
இதோ நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பார்த்திபன் எடுத்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் அனைவராலும் பாராட்டப்படும் படமாக உள்ளது. இந்த வெற்றி அவருக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்து. அதே உற்சாகத்தோடு இந்தப் படத்தின் இரண்டாம்பாகம் எடுக்கக் முடிவெடுத்துள்ளார். படத்தின் வெற்றி பற்றியும் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் அவரே கூறியுள்ளார் மேற்கொண்டு படியுங்களேன்.

திரைப்பட விழாக்களுக்கு
இப்பல்லாம் சந்தோஷம் என்பது கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. இந்தப் படத்தை நிறைய திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப் போறேன். நிறைய பரிசுகளை தள்ளிட்டு வரும் அப்படிங்கிறது இப்போதைய கனவு.

இரண்டாம் பாகம்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தோட பார்ட் 2-ஆக இயக்க தீர்மானித்திருக்கிறேன். இப்போதைக்கு தலைப்பு மட்டும் முடிவாகி இருக்கிறது. இன்னும் கதை எதுவுமே நான் தீர்மானிக்கவில்லை. படத்தோட பெயர் 'உப்புமா கம்பெனி'.

கிடைக்காத தியேட்டர்கள்
ஐநாக்ஸ், சத்யம் உள்ளிட்ட திரையரங்குகளில் எனக்கு ஒரு ஷோ தான் கொடுத்தாங்க. ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கில் கேட்டேன். "எப்படி.. நீங்க தியேட்டர நிரப்புவீங்க"னு அதோட முதலாளி சொன்னார். அதை எப்படி முன்கூட்டியே சொல்ல முடியும்? எனக்கு இந்தப்படம் நிரப்பும் அப்படிங்கிற நம்பிக்கை இருந்தது.

வெற்றிக்குப் பின்னர்
முதல்ல கமலா தியேட்டர்ல எனக்கு ஒரு ஷோ கொடுங்கனு கேட்டேன். அப்போ கொடுக்கல. இப்போ தியேட்டரே கொடுத்திருக்காங்க. மாயாஜால் தியேட்டர்ல முதல்ல 4 ஷோ இருந்தது, இப்போ 27 ஷோ ஓடுது.

என்னுடைய தைரியம்
என்னுடைய கதையில் எனக்கு யாருமே செய்யாத முயற்சினு ஒரு நம்பிக்கை இருந்தது. எனக்கு 25 வருஷமா என் மீதான நம்பிக்கை அப்படியே தான் இருக்கு. 'அபூர்வ சகோதரர்கள்' வரும்போது தான் என்னுடைய 'புதிய பாதை' படத்தை ரிலீஸ் பண்ணினேன். தைரியமா ரிலீஸ் பண்ணினேன். மக்கள் எனக்கு வெற்றியை கொடுத்திருக்கிறார்கள்.

கொண்டாடும் ரசிகர்கள்
ரசிகர்களும் அடுத்த கட்டத்திற்கு போயிருக்காங்க. இன்றைக்கு இருக்குற இளைஞர்கள் என்னை தலைல தூக்கி வைச்சுட்டு கொண்டாடுகிறார்கள்.

மணிரத்னம்,பாரதிராஜா
இயக்குநர் மணிரத்னம் "பெரிசா சாதிச்சுட்டீங்க. இந்த இளைஞர்களை கையில பிடிக்கிறது பெரிய விஷயம். அதை நீங்க பண்ணிட்டீங்க"ன்னார். இயக்குநர் பாரதிராஜா "25 வருஷத்தை ஒரே படத்துல தாண்டியிருக்க. அடுத்த 25 வருஷத்துக்கு இந்த ஒரு படம் போதுமானது",என்று பாராட்டியிருக்கார் என்று உற்சாகத்தோடு கூறுகிறார் பார்த்திபன்


Click it and Unblock the Notifications











