ஒழுக்கமாக படம் எடுத்தேன்.. அந்த படத்தை என் குடும்பம் மட்டுமே பார்த்தது.. பார்த்திபன் பேச்சு !
சென்னை : இயக்குனர் சாமி இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில், 8 பேர் சேர்ந்து தயாரித்திருக்கும் படம் அக்கா குருவி.
புகழ்பெற்ற இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய 'சில்ரன் ஆஃப் ஹெவன் ' படத்தின் தமிழ் ரீமேக் அக்கா குருவி.
இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பார்த்திபன் படம் வெற்றி பெற வாழ்த்துக்களை கூறினார்.

குடும்பம் மட்டுமே பார்த்தது
நான் உள்ளே வெளியே என்று ஒரு படத்தை இயக்கினேன் அதற்கு காரணம் நான் இயக்கிய சுகமான சுமைகள் படம் தான். நான் அந்த படத்தை குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்பதற்காக மிகவும் ஒழுக்கமாக எடுத்தேன். ஆனால், அந்த படத்தை என் குடும்பம் மட்டுமே பார்த்தது. அந்த படத்தால் நான் 75 லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்தேன். அது நான் சம்பாதித்த பணம் இல்லை. சம்பாதிக்க போகும் பணத்தையும் சேர்த்து போட்டு எடுத்த படம்.

தேர்ந்தெடுப்பது முக்கியம்
அந்த பொருளாதார பிரச்சனை, என் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்து விட்டது. ரஹ்மான் சார் சொல்வது போல் இரண்டு பாதை உள்ளது. ஒன்று காதல் மற்றொன்று வெறுப்பு. அதில் நாம் தேர்தெடுக்க வேண்டியது காதலை தான் என்பார். அது போல, தேர்வு செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று என நினைக்கிறேன்.

வியாபாரம் ஆகவில்லை
இயக்குனர் சாமி ‘சில்ரன் ஆஃப் ஹெவன் ‘ தேர்ந்தெடுத்து இருக்கிறார். நான் ஒத்த செருப்பு படத்தை இயக்கும் போது எவ்வளவு கஷ்டப்பட்டேனோ, அது வெளியாகி ஓடிடி தளத்திற்கு சென்றவுடன் உலக பெருமையெல்லாம் கிடைத்தது. இப்போது கூட அமீர், நீங்கள் உங்கள் படத்தை வியாபாரம் செய்துவிட்டீர்களா என்று கேட்டார். யாரும் இது வரை என் வீட்டின் பக்கம் அல்ல தெருவின் பக்கம் கூட வரவில்லை என்று சொன்னேன். இந்த மாற்றங்கள் எப்போது நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

இரவின் நிழல்
நான் முந்தைய காலத்தில் பல படங்களின் மூலம் நிறைய சம்பாதித்து இருக்கலாம். ஆனால், நிறைவை தரும் படம் இரவின் நிழல் மட்டும் தான். பாக்யராஜ் சார் படத்தை பார்த்தார். அந்த பாராட்டு என்பது எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காது. அது போன்ற சந்தோஷத்தை சாமி உணருவார்.

ஷூவை வைத்து படம் எடுத்துள்ளார்.
இயக்குனர் ஹச்.வினோதும் என்னுடன் உதவி இயக்குனராக சில காலங்கள் பணியாற்றியுள்ளார். அவர் அஜித் அஜித் என்று போகும் சமயத்தில், சாமி மஜித் மஜித் என்று போயிருக்கிறார். அவரின் சோர்விற்கு காரணம் அவர் இயக்குனராக மட்டுமல்லாமல், இப்படத்திற்கு தயாரிப்பாளராக இருப்பதும் ஒரு மிக முக்கிய காரணம். ஆனால், அவர் என்னை விட ஒரு படி மேல் தான். நான் ஒரு செருப்பை வைத்து படம் இயக்கினேன், இவர் இரண்டு ஷூவை வைத்து படம் இயக்கியிருக்கிறார். இந்த படம் வெற்றியடையும் என்றார்.


Click it and Unblock the Notifications











