அதிலென்ன கஞ்சத்தனம்.. அந்த நடிகர் இன்னொரு குபேரன்.. நெகிழ்ச்சியடைந்த பார்த்திபன்
சென்னை: இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு புதிய பாதை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பார்த்திபன். முதல் படத்திலேயே கதாநாயகனாகவும் அறிமுகமானார். இவருக்கு ஜோடி சீதா நடித்தார். மேலும் அந்தப் படத்தில் மனோரமா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். படமும் தேசிய விருதை பெற்றது. அன்றிலிருந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவராக இருக்கிறார் பார்த்திபன்.
பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்துவிட்டு புதிய பாதை படத்தில் இயக்குநராக அறிமுகமாகி இப்போது கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் பார்த்திபன். படத்துக்கு படம் தன்னுடைய மேக்கிங்கில், கதையில் வித்தியாசம் காட்டுவதில் பார்த்திபனுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. இவர் இயக்கிய குடைக்குள் மழை, ஹவுஸ்புல், உள்ளே வெளியே உள்ளிட்ட பல படங்கள் அந்த வகையை சேர்ந்தவை. இருப்பினும் இயக்குநராக அவர் இயக்கிய பல படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறாதவை.
நடிப்பில் மிரட்டிய பார்த்திபன்: இதற்கிடையே தான் இயக்கிய படங்களில் பெரும்பாலும் அவரே நடித்த சூழலில் இயக்கத்தில் கொஞ்சம் சறுக்கல் ஏற்பட்டதால் நடிப்பில் பெரிய அளவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் அவர். அப்படி அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய பெயரை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து நானும் ரவுடிதான் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: இதற்கிடையே சில காலம் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்த பார்த்திபன் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் மூலம் மீண்டும் இயக்குநராக ரீ என்ட்ரி கொடுத்தார். படம் வெற்றியடைந்தாலும் அடுத்ததாக அவர் இயக்கிய கோடிட்ட இடங்களை நிரப்புக, ஒத்த செருப்பு, இரவின் நிழல்,டீன்ஸ் ஆகிய படங்கள் வித்தியாசமான முயற்சி என்று பாராட்டப்பட்டாலும் பெரிய வெற்றியை பெறவில்லை.
பார்த்திபன் ட்வீட்: இந்நிலையில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் பார்த்திபன். அதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " காலை வணக்கம் நண்பர்களே. ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாணுடன் நான் நடிக்கும் படபிடிப்பு. என் மீது அலாதி அக்கறையுடன் காண வந்த Mega Star shri Chiranjeevi இருவரின் ஈடில்லா அன்பின் இடிபாட்டுக்கிடையே சிக்கி சின்னாபின்னமாகிவிட்டேன்.
அதிலென்ன கஞ்சத்தனம்: திறமையான கலைஞனை வானளாவப் பாராட்டுவதில் சிரஞ்சீவி மற்றொரு குபேரன். அதை நான் பாராட்டிய போது அவரது பதில்" அதிலென்ன கஞ்சதனம்? நான் ஒரு சிறு பாராட்டுக்கு கூட ஏங்கி ஏங்கி மன்ம் வீங்கி உயரிய அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்காமல் பின் தன்னம்பிக்கைக் கூட்டி கூடுதலாய் உழைத்தே உயர்ந்தேன்"என்றார்.
நானும் தமிழ்நாட்டிலிருந்து கூடுதல் தூரம் கடந்து ஆந்திராவில் வீசும் புதிய புயலாய்.... புதிய அங்கீகாரத்திற்காக (இடது ஓரமாய்) அங்கவஸ்த்திரத்துடன் நிற்பது நானே. முழு தோற்றத்தை மைத்ரி மூவிஸ் வெளியிடுவார்கள் தக்க தருனத்தில். அது என்ன ஏற்பாடோ? நான் நடிக்கும் ஒவ்வொரு ஷாட்டுக்கும் கைதட்டினார்கள். Technician ஒருவர் அருகில் வந்து வலது காதில் கம்மல் மீது உரசியபடி தெலுங்கில் சொப்பினார் " இக்கடக் கூட, இப்புடுக் கூட ஆ சோழா கிங்குலாகனே மிம்மில்னி ச்சூஸ்த்தாமு" ஆயிரத்தில் ஒருவன்டா" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











