Vijayakanth: மருத்துவமனை அறிக்கை.. அதிர்ச்சியாகிட்டேன்.. விஜயகாந்துக்காக வேண்டும் பார்த்திபன்!
சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுவாச பிரச்சனை இருப்பதாகவும் மோசமான நிலையில் அவரது உடல் நலம் இருப்பதாகவும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை பிரபலங்களையும் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.
நடிகர்கள் சரத்குமார், ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் அமீர் உள்ளிட்ட பல பிரபலங்கள் விஜயகாந்த் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபனும் தனது பிரார்த்தனையை தெரிவித்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த்: இனிக்கும் இளமை படத்தின் மூலம் 1979ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜயகாந்த். 1981ம் ஆண்டு நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை படம் விஜயகாந்துக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. சந்திரசேகர் இயக்கத்தில் பல படங்களில் தொடர்ந்து விஜயகாந்த் நடித்தார். வைதேகி காத்திருந்தாள், ஊமை விழிகள், புலன் விசாரணை என பல படங்களில் மாஸ் காட்டி வந்த விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்து பிளாக்பஸ்டர் கொடுத்த நிலையில், கேப்டன் என்றே ரசிகர்களாலும் திரையுலகினராலும் இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறார்.
தேமுதிகவை ஆரம்பித்து: வல்லரசு, நரசிம்மா, வாஞ்சிநாதன், ரமணா, வானத்தை போல என பல ஹிட் படங்களை கொடுத்த விஜயகாந்த் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். அவரை போலவே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்து தேமுதிக கட்சியை ஆரம்பித்து மிகப்பெரிய வெற்றியையும் கண்டார். ஆனால், ஓயாமல் ஓடி உழைத்து வந்த விஜயகாந்த் தனது உடல்நலனில் அக்கறை செலுத்தாத நிலையில், அவருக்கு உடலில் ஒவ்வொரு பிரச்சனையாக வர ஆரம்பித்தன.
மருத்துவமனையில் அனுமதி: உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரை அழைத்துச் சென்று அவருக்கு பல்வேறு விதமான சிறப்பு சிகிச்சைகளை அவரது மனைவி பிரேமலதா மற்றும் இரு மகன்களும் இதுவரை பார்த்து வருகின்றனர். தற்போது சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பிரிவில் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பார்த்திபன் பிரார்த்தனை: "ஏகமனதாக எல்லோராலும் நல்ல மனதுக்காரர் என போற்றபடுபவர் திரு விஜயகாந்த்.நேற்று அவரது துணைவியாருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். மருத்துவமனையிலிருந்து இன்று ஒரு அறிக்கை அதிர்ச்சியாக இருந்தது. எனக்குத் தெரிந்து குறை சொல்ல ஏதுமற்ற உள்ளமது. குறைவின்றி நல்ல ஆரோக்யத்துடன் வீடு திரும்ப வேண்டும்" என பார்த்திபன் தற்போது தனது பிரார்த்தனையை பதிவிட்டுள்ளார். பல முன்னணி நடிகர்களும் அரசியல் தலைவர்களும் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











