மத்திய அரசு விரும்பியது என்றார்கள்.. அஜித் நம்பர் ஏற்பாடு செய்தேன்.. பார்த்திபன் சொல்றத கேட்டீங்களா?
சென்னை: அஜித் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி தரும் விதமாக ஏகேவுக்கு பத்ம பூஷன் விருதினை வழங்கியிருக்கிறது ஒன்றிய அரசு. அதனைத் தொடர்ந்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். அஜித்தும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இந்தச் சூழலில் அஜித்துக்கு பத்ம விருது வழங்கியது குறித்து இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில் போட்டிருக்கும் பதிவு ட்ரெண்டாகியிருக்கிறது.
அஜித் குமார் நடிப்பில் பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். நிச்சயம் துணிவு படத்தை போல் இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும் என்று ஏகே ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கிறார்கள். படத்திலிருந்து இதுவரை வெளியான இரண்டு சிங்கிள்களும், ட்ரெய்லரும் பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. முக்கியமாக படத்தில் அஜித்தின் லுக்கை பார்த்து பலரும் மெர்சல் ஆகியிருக்கிறார்கள்.

குட் பேட் அக்லி: அஜித்தை பொறுத்தவரை ஒரு படத்தை முடித்துவிட்டு சில மாதங்கள் கழித்துதான் இன்னொரு படத்தின் ஷூட்டிங்கிற்கு செல்வார். ஆனால் விடாமுயற்சி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்தார். பல வருடங்கள் கழித்து ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் அஜித் நடிப்பதாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராவும் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார். குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
பத்ம பூஷன்: இப்படி இந்த வருடத்தில் அஜித்தின் இரண்டு படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க அஜித்துக்கு ஒன்றிய அரசு பத்ம பூஷன் விருது வழங்கியிருக்கிறது. இதுவும் ஏகே ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக அமைந்திருக்கிறது. இதற்கிடையே துபாயில் நடந்த கார் ரேஸில் தனது டீமுடன் களமிறங்கி மூன்றாவது இடத்தை அஜித் பிடித்திருந்தார். அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று பலராலும் கருதப்படுகிறது.
பார்த்திபன் பதிவு: இந்நிலையில் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது குறித்து இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் நேற்று தனது எக்ஸ் தள பக்கத்தில், "இன்று மதியம் ஒரு இசை பிரபலம், நண்பர் திரு அஜீத் குமாரின் எண் கேட்க,'ஏன்?" கேட்டேன், மத்திய அரசு அவரை அவசரமாக அணுக விரும்புகிறது. உடனே கொடுங்கள் என்றது அக்குரல். நல்ல விஷயம்தான் என்பதை புரிந்துக் கொண்டு நான் முயற்சித்தேன்.ஒருவழியாக அவரின் P r o திரு சுரேஷ் சந்திராவின் தொடர்பை ஏற்படுத்தினேன். மாலையில் வந்த செய்தி அஜீத் கழுத்துக்கு மாலை என்பது மீறி,' தலை'க்கு வைர கிரீடம் ஆனது. வாழ்த்துகள் பத்ம பூஷன் அஜித் குமார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அஜித்தின் நன்றி: முன்னதாக தனக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட அஜித், "இந்த நாளை காண்பதற்கு எனது மறைந்த தந்தை இப்போது இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனாலும் அவரது வழிகாட்டுதல் நான் செய்யும் அத்தனையிலும் இருக்கிறது. எனது அம்மாவின் அன்புக்கும், நான் என்னவாக விரும்பினேனோ அதுவாக மாற உதவிய அவரது தியாகங்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். கடத 25 வருடங்களில் எனக்கு துணையாக இருக்கும் என் மனைவியும், தோழியுமான ஷாலினி எனது பக்கபலம். எனது குழந்தைகள் அனௌஷ்கா, ஆத்விக் ஆகியோர் எனது பெருமை மற்றும் ஒளி" என்று எமோஷனலாக குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











