இயக்குநராகும் பார்த்திபன் மகன்.. தந்தைக்கும் வாய்ப்பு கொடுக்கிறாராம்.. குவியும் வாழ்த்த
சென்னை: திரைக்கதை மன்னன் என அழைக்கப்படும் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு புதிய பாதை மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பார்த்திபன். முதல் படத்திலேயே கதாநாயகனாகவும் அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டானதோடு மட்டுமின்றி தேசிய விருதினையும் வென்றது. இந்தச் சூழலில் பார்த்திபனின் மகன் ராக்கி இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். அதுகுறித்து பார்த்திபனும் நெகிழ்ச்சியோடு தனது எக்ஸ் தளத்தி பதிவிட்டிருக்கிறார்.
கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் பார்த்திபன். படத்துக்கு படம் வித்தியாசம் காட்டுவதில் பார்த்திபன் வல்லவர். இவர் இயக்கிய குடைக்குள் மழை, ஹவுஸ்புல், உள்ளே வெளியே உள்ளிட்ட பல படங்கள் அந்த வகையை சேர்ந்தவை. இருப்பினும் இயக்குநராக அவர் இயக்கிய பல படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறாதவை. இதனால் சில காலம் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்த பார்த்திபன் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
நடிப்பில் கலக்கும் பார்த்திபன்: நடிப்பில் கவனம் செலுத்த பார்த்திபனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் . செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்து வெளியான அந்தப் படத்தில் சோழ மன்னர் கதாபாத்திரத்தில் தோன்றிய பார்த்திபனை பார்த்து அனைவருமே வாயடைத்து போனார்கள். அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்திருந்தார் பார்த்திபன். அதேபோல் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரம் அவருக்கு பொருந்திப்போனது.

கதையே இல்லாமல் ஒரு படம்: இதற்கிடையே சில காலம் இயக்கத்துக்கு முழுக்கு போட்டிருந்த பார்த்திபன் இயக்குநராக கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். கதையே இல்லாமல் உருவான கதை திரைக்கதை வசனம் இயக்கம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படம் கொடுத்த உற்சாகத்தில் கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது.கடைசியாக அவர் இயக்கிய டீன்ஸ் படமும் தோல்வியைத்தான் சந்தித்தது.
பார்த்திபனின் மகன்: இந்தச் சூழலில் தனது மகன் ராக்கி குறித்து நெகிழ்ச்சியோடு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் பார்த்திபன். அந்தப் பதிவில், " ராக்கி பார்த்திபன் ! என் மகன் என் உயிருக்கு நிகர். கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம், திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார் .விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன்.
அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன். என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் class apart ! அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்த நாள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள், 'தந்தை போலவே ராக்கியும் இயக்கத்தில் பெரிய பெயர் பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்து கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











