தமிழ் சினிமாவையே புரட்டி போட்ட பருத்திவீரன்.. சித்தப்பு சரவணன் இப்படி கழுவி ஊத்துறாரே
சென்னை: அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி, சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்த படம் பருத்திவீரன். கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. சொல்லப்போனால் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய படங்களில் அதுவும் ஒன்று. பிரியாமணிக்கு தேசிய விருதெல்லாம் கிடைத்தது. சரவணனுக்கும் அது தரமான ரீ என்ட்ரியாக அமையும் என எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் அப்படி அவருக்கு நடக்கவில்லை.
மௌனம் பேசியதே, ராம் படங்களை இயக்கிவிட்டு மூன்றாவதாக அமீர் இயக்கிய படம் பருத்திவீரன். கார்த்தி இந்தப் படத்தில்தான் ஹீரோவாக நடித்தார். முதலில் சூர்யாதான் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் தன் தம்பிக்காக அதனை விட்டுக்கொடுக்க; எந்த ஹீரோவுக்கும் இல்லாத அளவுக்கு ஓபனிங் கிடைத்தது. சொல்லப்போனால் சிவாஜி கணேசனுக்கு பிறகு முதல் படத்திலேயே பெரிய பெயரை பெற்ற ஹீரோ என்றால் அவர் கார்த்திதான். இதனை ரஜினியும் ஒரு மேடையில் சொல்லியிருந்தார்.

படத்தின் ஸ்பெஷல்: அந்தப் படத்தின் ஒட்டுமொத்த பலமுமே அமீரின் கதையும், மேக்கிங்தான். படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதி காட்சி வரை ஸ்க்ரீன் ப்ளேவை அவ்வளவு இயல்பாக கொண்டு சென்றிருப்பார். கார்த்தியும் முதல் படத்தில் எவ்வளவு உயிரை கொடுத்து நடிக்க முடியுமோ அவ்வளவு நடித்திருந்தார். அவரது நடிப்பை பார்த்த பலரும், இது முதல் படம் மாதிரியே தெரியவில்லை என்று புகழ்ந்தார்கள். அவருக்கு போட்டியாக பிரியாமணி நடிக்க; அம்மணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு பெரிய ரவுண்டு எதுவும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சரவணனுக்கும் அதுதான் நிலைமை: பிரியாமணிக்கு மட்டுமின்றி சரவணனுக்கும் அதுதான் நிலைமை. படத்தின் ஒவ்வொரு கேரக்டருக்கும் அமீர் முக்கியத்துவம் கொடுத்திருப்பார். அப்படித்தான் சரவணனுக்கும். கார்த்திக்கு சித்தப்பாவாக நடித்திருந்தார். அவரும் தன்னுடைய ஒவ்வொரு சீனுக்கும் நடிப்பில் பலம் சேர்த்திருப்பார். ஒருகாலத்தில் ஹீரோவாக நடித்த அவர்; விஜயகாந்த்தின் இடத்தை பிடிப்பார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் நடக்கவில்லை. பருத்திவீரன் மெகா ஹிட் ஆனதால் குணசித்திர நடிகராக பெரிய இடத்தை பிடிக்கலாம் என்ற அவரது கணக்கு பொய்யாகிப்போனது.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சரவணன் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "பருத்திவீரன் திரைப்படம் மக்களுக்குதான் சந்தோஷத்தை கொடுத்தது. எனக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. அந்தப் படம் எனக்கு வாழ்க்கையும் கொடுக்கவில்லை. பணமும் கொடுக்கவில்லை. அந்தப் படத்துக்கு பிறகும் வந்த எல்லா படங்களும் இதே மாதிரி ரோலாகத்தான் வந்தன. 17 வருடங்கள் வீட்டில் சும்மாதான் அமர்ந்திருக்கிறேன்" எண்றார்.
சரவணன் ஓரளவுக்கு பிஸி: அவர் சொல்வது கிட்டத்தட்ட உண்மைதான். பெரிய அளவில் அவர் படங்களில் தலை காட்டுவதில்லை. கடைசியாக அவர் கடைகுட்டி சிங்கம், தலைவன் தலைவி, குற்றம் தவிர், வித் லவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக போலீஸ் ஃபேமிலி என்ற படமும் வரவிருக்கிறது. இந்தப் படங்களாவது தன்னை மேற்கொண்டு பிஸியான நடிகராக வைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications