இவனை விட்டுட்டு என்னால ஜெயிலுக்குப் போக முடியாது.. முதல் மனைவியின் புகாருக்கு நடிகர் சரவணன் விளக்கம்
சென்னை: வைகாசி வந்தாச்சு, சூரியன் சந்திரன் போன்ற படங்களில் 90களில் நடித்தவர் நடிகர் சரவணன். அதன்பின்னர் நந்தா, பருத்திவீரன் திரைப்படங்களில் முரட்டுத்தனமான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துப் பெரிய அளவில் கம்பேக் கொடுத்தார். தற்போது படங்கள் மற்றும் வெப் தொடர்களில் பிஸியாக நடித்து வரும் சரவணனின் குடும்ப வாழ்க்கை, இப்போது போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு சூர்யாஸ்ரீ என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் சரவணன். ஆனால் இவர்களுக்குக் குழந்தை இல்லாததால், முதல் மனைவியின் சம்மதத்தோடு ஸ்ரீதேவி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு தற்போது 9 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், நடிகர் சரவணன் தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அவரிடம் இருந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் முதல் மனைவி சூர்யாஸ்ரீ திடீரென காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜெயிலுக்குப் போக முடியாது: இந்தப் புகாரைத் தொடர்ந்து, தனது இரண்டாவது மனைவி மற்றும் மகனைத் அழைத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு வந்த சரவணன், அங்குக் குவிந்திருந்த செய்தியாளர்களிடம் உணர்ச்சிவசப்பட்டுத் தன் பக்கத்து நியாயங்களை கூறினார். என்னுடைய முதல் மனைவி நான் கொலை மிரட்டல் விடுப்பதாகப் பொய் புகார் அளித்திருக்கிறார். நான் யாருக்கும் எந்த மிரட்டலும் விடுக்கவில்லை. நான் இரண்டாவது திருமணம் செய்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. என் மகனுக்கு இப்போது 9 வயது ஆகிறது. இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது தேவையில்லாமல் குடும்பத்தில் புயலைக் கிளப்புகிறார். என் மகன்தான் என் உலகம், இவனைத் தவிக்க விட்டுவிட்டு என்னால் ஜெயிலுக்குச் சென்று கலி சாப்பிட முடியாது.
பணம் பறிக்கும் நோக்கம்: தொடர்ந்து பேசிய சரவணன், நான் என் குடும்பத்துடன் மிகவும் அமைதியான வாழ்க்கை வாழவே விரும்புகிறேன். சூர்யாஸ்ரீயின் உயிருக்கு என்னால் எந்தவித ஆபத்தும் வராது. சொல்லப்போனால் எனக்கு இரண்டாவது திருமணமே அவர்தான் முன்னின்று செய்து வைத்தார். தற்போது கோர்ட்டில் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் தொடர்பான வழக்குகள் நடந்து வருகின்றன. அவரிடம் இருந்து ஒரு பெரிய தொகையைப் பணம் பறிக்கும் நோக்கில், சிலரின் தூண்டுதலால் என் மீது இந்த மாதிரி பழிவாங்கும் செயல்களில் அவர் ஈடுபட்டு வருகிறார் என்று சரவணன் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். முதல் மனைவியின் புகாரும், அதற்கு இரண்டாவது மனைவியுடன் வந்து சரவணன் கொடுத்த இந்த அதிரடி விளக்கமும் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications