சமூகவிரோத கருத்துகளா? சென்சார் போர்டு மறுத்த பிரபல ஹீரோயின் படத்துக்கு மறு தணிக்கை குழு அனுமதி!
கொச்சி: சென்சார் போர்டு அனுமதி மறுத்த, பிரபல ஹீரோயின் படத்துக்கு மறு தணிக்கைக் குழு சான்றிதழ் அளித்துள்ளது.
தமிழில், பூ படம் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. இதையடுத்து இங்கு பூ பார்வதி என்றே அறியப்படுகிறார்.
இந்தப் படத்தை அடுத்து அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. பல படங்களில் நடித்தார்.

பெங்களூர் நாட்கள்
தனுஷூடன் மரியான், கமலுடன் உத்தமவில்லன், ஆர்யா, ராணா நடித்த பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் பார்வதி. இந்தியில், கரிப் கரிப் சிங்கிள் என்ற படத்தில் இர்பான் கானுடன் நடித்திருந்தார்.

திராவக பாதிப்பு
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வரும் அவர், உயரே என்ற படத்தில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்டப் பெண்ணாக நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன் இவர் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் இருந்து திடீரென விலகினார். இது கேரளாவில் பரபரப்பானது.

ஜவஹர்லால் நேரு
இந்நிலையில், அவர் இப்போது நடித்துள்ள மலையாளப் படம் வர்த்தமனம் (Varthamanam). சித்தார்த் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் ரோஷன் மாத்யூ, சித்திக், சஞ்சு உட்பட பலர் நடித்துள்ளனர். இதில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக, ஃபஸியா சுபியா என்ற மாணவியாக பார்வதி நடித்துள்ளார்.

விரோத கருத்து
அவர் சுதந்திர போராட்ட வீரர் முகமது அப்துர் ரஹ்மான் சாகேப் பற்றி ஆய்வு செய்யும் கேரக்டரில் நடிக்கிறார். இந்நிலையில் இந்தப் படம் சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு சான்றிதழ் தர மறுத்துவிட்டது. சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக படம் இருப்பதாகவும் சமூக விரோத கருத்துகள் அதிகம் இருப்பதாகவும் கூறியுள்ளது.

இயங்கி வருகிறார்
பாஜகவை சேர்ந்த சென்சார் போர்டு உறுப்பினர் சந்தீப் குமார் இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் கதாசிரியர் ஆர்யதன் செளகத், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்யதன் முகமதுவின் மகன். மலையாளத்தில் சில படங்களை தயாரித்திருக்கிறார். அரசியலிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். இதனால் எதிர்ப்பு கிளம்பியதாகக் கூறப்பட்டது.

ரிவைசிங் கமிட்டி
டெல்லியில் நடந்த மாணவர்கள் போராட்டம், முஸ்லீம், தலித் பிரச்சனைகள் பற்றி படத்தில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து கேரள சென்சார் போர்டு சான்றிதழ் தர மறுத்ததை அடுத்து, படக்குழு மும்பையில் உள்ள ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பியது.

மறு தணிக்கை
இந்நிலையில், படத்தைப் பார்த்த மறு தணிக்கைக் குழு, படத்துக்கு அனுமதி அளித்துள்ளது. ஐந்து செகன்ட் வசனத்தை மட்டும் மியூட் பண்ணக் கூறிய மறு தணிக்கைக் குழு படத்தில் எந்த இடத்தையும் வெட்டவில்லை என்ற படக்குழு கூறியுள்ளது. இதையடுத்து பிப்ரவரி மாதம் படம் ரிலீஸ் ஆகிறது.


Click it and Unblock the Notifications











