இரண்டாம் பாதி தெறிக்குது.. பக்கா கமர்ஷியல் - பத்து தல படம் எப்படி இருக்கு?.. முதல் விமர்சனம்
சென்னை: சிம்பு நடித்திருக்கும் பத்து தல படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வந்தவர். பல ஹிட் படங்களை கொடுத்த சிம்பு இடையில் அவருக்கு நடந்த சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

மாநாடு மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு
சினிமாவிலிருந்து சிம்பு ஒதுங்கி இருந்தாலும் அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர். இதனால் தனது எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி, உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தி மாநாடு படத்தில் நடித்தார் சிம்பு.

100 கோடி வசூல் செய்த மாநாடு
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபுவுடன் சிம்பு இணைந்ததால் அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது. டைம் லூப் கான்செப்ட்டை வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில் திரைக்கதை, சிம்புவின் நடிப்பும், எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு உள்ளிட்டவை கைகொடுக்க படம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி மாநாடு படம் நூறு கோடி ரூபாயை வசூலித்தும் சாதனை படைத்தது.

மீண்டும் இணைந்த கௌதம் - சிம்பு
மாநாடு படம் கொடுத்த மாபெரும் வெற்றியை அடுத்து கௌதம் மேனனுடன் இணைந்தார் சிம்பு. வெந்து தணிந்தது காடு என்ற பெயருடன் வெளியான அந்தப் படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் சிம்பு. படத்தில் அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் சிம்பு மீண்டும் பழைய நடிகராக வந்துவிட்டார் என உற்சாகத்துடன் கூறிவந்தனர். அந்தப் படத்தின் வெற்றியை அடுத்து சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் கமிட்டானார். இந்தப் படம் கன்னட படமான முஃப்தி படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கிறது.

கவனம் ஈர்த்த பத்து தல ட்ரெய்லர்
இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும், ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. படமானது மார்ச் 30ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படமும் ஹிட்டாகி சிம்பு ஹாட்ரிக் ஹிட் கொடுத்த ஹீரோ என்ற பெயரை பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

எப்படி இருக்கிறது பத்து தல பட விமர்சனம்
இந்நிலையில் பத்து தல படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியிருக்கிறது. கோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் பத்து தல படத்தை பார்த்திருக்கிறார். அதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பத்து தல படத்தின் சென்சார் காப்பியை பார்த்தேன். படம் மிகவும் பிடித்திருக்கிறது. பக்கா கமர்ஷியல் பேக்கேஜுடனும், நல்ல எமோஷன்களுடனும் படம் உருவாகியிருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் சிம்பு, கௌதமின் நடிப்பும், கிருஷ்ணாவின் மேக்கிங்கும் பிடிக்கும். குறிப்பாக இரண்டாம் பாதி அருமையாக இருக்கிறது" என பதிவிட்டுள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











