இளையராஜா பாடலின் காப்பியா பத்து தல பாடல்?.. சமூக வலைதளங்களில் விவாதம்
சென்னை: பத்து தல படத்தில் இடம்பெற்றிருக்கும் பட்டம் அடி பட்டம் என்ற பாடல் இளையராஜாவின் ட்யூனிலிருந்து காப்பி அடிக்கப்பட்டிருப்பதாக விவாதம் கிளம்பியுள்ளது.
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் பத்து தல. கன்னடத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட முஃப்தி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகியிருக்கும் இப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

கவனம் ஈர்த்த பத்து தல ட்ரெய்லர்
பத்து தல படமானது மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் சிம்பு மற்றும் பத்து தல படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதனையடுத்து படத்தின் ட்ரெய்லர் வெளியானது. பத்து தல படத்தில் சிம்பு கேஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிம்புவின் நடிப்பும், கிருஷ்ணாவின் மேக்கிங்கும் அட்டகாசமாக இருக்கிறதென்று ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை
பத்து தல படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே படத்தின் இயக்குநர் கிருஷ்ணாவுடன் அவர் பணியாற்றிய சில்லுனு ஒரு காதல் படமும், பாடல்களும் மெகா ஹிட்டாகின. குறிப்பாக அதில் இடம்பெற்ற முன்பே வா என் அன்பே வா பாடல் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. எனவே பத்து தல படத்திலும் இந்தக் கூட்டணியின் மேஜிக் தொடரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

கவனம் ஈர்த்த பட்டோம் அடி பட்டோம்
அந்த நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக பட்டோம் அடி பட்டோம் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருக்கிறார். ஆனால் முதலில் இந்தப் பாடலை பாட வேண்டியது சிம்புதான் என பத்து தல ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை கேட்ட ரசிகர்கள், 'அடடா இந்தப் பாடலை சிம்பு பாடியிருந்தாலும் நன்றாக இருந்திருக்குமே' என பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

பத்து தல பாடல் காப்பியா
இந்நிலையில் பட்டோம் அடி பட்டோம் பாடலை சுற்றி புதிய சர்ச்சை ஒன்று எழுந்திருக்கிறது. அதாவது இந்தப் பாடலின் பல்லவியானது இளையராஜா இசையமைப்பில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான தாயம்மா என்ற படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு முத்துக்கிளி கத்தும் என்ற பாடலின் ஆரம்ப இசையையும், பல்லவியையும் ஒத்து இருப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது.

இளையராஜா ரசிகர்கள் Vs ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள்
இதனையடுத்து இளையராஜா ரசிகர்களுக்கும், ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியுள்ளது. இளையராஜா இசையைத்தான் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். அதில் ஏ.ஆர்.ரஹ்மானும் இப்போது இணைந்துவிட்டார் போல என ராஜா ரசிகர்கள் கூற; விடுதலை படத்தில் காட்டுமல்லி பாடலின் ஆரம்ப இடையும், இளையராஜா இசையமைப்பில் என் மன வானில் படத்தில் இடம்பெற்ற என்ன சொல்லி பாடுவேனோ பாடலின் ஆரம்ப இசையும்தான் ஒரேமாதிரி இருக்கிறது என ரஹ்மான் ரசிகர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











