நினைவிருக்கா.. பத்து தல படத்தின் இரண்டாவது சிங்கிள் ப்ரோமோ வெளியானது
சென்னை: சிம்பு நடித்திருக்கும் பத்து தல படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
நடிப்பு, நடனம், இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் சிம்பு. ஆனால், இடையில் அவர் சில பிரச்னைகளை சந்திக்க சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். ஆனால் சிம்பு மீண்டும்ந் அடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர். இதனையடுத்து தீவிர உடற்பயிற்சி செய்து உடலை சரிசெய்து, எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி ரீ எண்ட்ரி கொடுத்தார் சிம்பு.

மாநாடு மூலம் கம்பேக்
மீண்டும் நடிக்க முடிவு செய்த பிறகு அவர் நடித்த ஈஸ்வரன் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை.. அதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. டைம் லூப்பை மையமாக வைத்து வெளியான படத்தில் சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

வெந்து தணிந்தது காடு படமும் ஹிட்
மாநாடு கொடுத்த வெற்றியும், பெற்றுக்கொடுத்த பாராட்டும் அவருக்கு உற்சாகத்தை அளிக்க கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடிக்க கமிட்டானார் சிம்பு. ஜெயமோகன் எழுதிய சிறுகதையை வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல
இப்படி ரீ எண்ட்ரியில் நடித்த முதல் இரண்டு படங்களும் ஹிட்டாக தற்போது பத்து தல படத்தில் நடித்திருக்கிறார் சிம்பு. சிவராஜ்குமார் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான முஃப்தி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகியிருக்கும் இப்படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய ஒபலி கிருஷ்ணா இயக்குகிறார். இப்படத்திலும் சிம்பு கேங்ஸ்டராக நடிக்கிறார். அவருடன் கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படமானது மார்ச் 30ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

பத்து தல படத்தின் டீசர்
படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்துவிட்டதாக இயக்குநர் கிருஷ்ணா அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்தார். இதற்கிடையே படத்தின் டீசர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றது. டீசரை வெகுவாக பாராட்டிய ரசிகர்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையையும் கொண்டாடிவருகின்றனர். பத்து தல டீசரை யூட்யூபில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர்.

பத்து தல படத்தின் இரண்டாவது சிங்கிள் ப்ரோமோ
பத்து தல படத்தில் இடம்பெற்றிருக்கும் நம்ம சத்தம் என்ற பாடல் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோ இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் ப்ரோமோவில் ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் கபிலன், ஒபலி கிருஷ்ணா, அமீன் உள்ளிட்டோர் இருக்கின்றனர். கிருஷ்ணா பாடலுக்கான சூழலை அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. நினைவிருக்கா என்று தொடங்கும் அந்தப் பாடலை ரஹ்மானின் மகன் அமீனும், சக்தி ஸ்ரீ கோபாலனும் பாடியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











