twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மற்றவர்களின் ரசனையை நீங்கள் தீர்மானிக்காதீர்கள்.. கரு.பழனியப்பனை சாடிய எழுத்தாளர்!

    இயக்குநர் கரு.பழனியப்பனை எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் விமர்சித்துள்ளார்.

    |

    சென்னை: எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் இயக்குனர் கரு.பழனியப்பனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    க்ரைம் நாவல் எழுதும் எழுத்தாளர்கள் பற்றி இயக்குனர் கரு.பழனியப்பன் பேசும்போது, சமூகத்திற்கு அவசியமான படைப்பைத் தரும் எழுத்தாளன் நான்கு வருடத்திற்கு ஒரு புத்தகம் தருகிறான். சமூகத்திற்கு அவசியமில்லாத க்ரைம் நாவல் எழுதும் எழுத்தாளன் மாதம் ஒன்று தந்துவிடுகிறான் என கரு பழனியப்பன் பேசியதாக குறிப்பிட்டுள்ள எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அதற்கு பதிலளித்துள்ளார்.

    மதிப்பிற்குரிய கரு.பழனியப்பன் அவர்களே.. வணக்கம். இன்றும் இப்போதும் நீங்கள் என் மதிப்பிற்கு உரியவர்தான். உங்கள் மேடைப் பேச்சுக்களில் உள்ள தெளிவையும், சரளமான வார்த்தை வீச்சுக்களையும் வசீகரிக்கும் பேச்சாற்றலையும் புகழ்ந்து தனியாகவே ஒரு பதிவு போட்டிருக்கிறேன். போகிற போக்கில் கைத்தட்டல் நோக்கத்துடன் தெளித்த இந்தக் கருத்துக்கு மட்டும் நான் பதில் சொல்லியாக வேண்டும்.

    ஆச்சரியம்

    ஆச்சரியம்

    ஒரு சமூகத்திற்கு என்ன வகையான படைப்புகள் அவசியம் என்பதை சமூகம்தான் தீர்மானிக்கிறது.
    க்ரைம் நாவல் என்றாலே முகம் சுளிக்கும் போலித்தனமான மனோபாவம் கொண்ட ஒரு கூட்டத்தில் நீங்களும் உண்டென்பதை அறிய ஆச்சரியம். இராமாயணமும், மகாபாரதமும் ஒரு வகையில் கிரைம் கலந்த இதிகாசங்கள் என்பேன் நான். அதில் இல்லாத கொலைகளா? ரத்தமா? மக்கள் கொண்டாடும் நாயகன், முதல் மரியாதை, தேவர் மகன் படங்களில் கொலையும், ரத்தமும் உண்டா இல்லையா?

    க்ரைம் படங்கள்

    க்ரைம் படங்கள்

    நம்மவர், மகாநதி, ஹேராம் கொடுத்த அதே கமல்தான் கலைஞன், சிவப்பு ரோஜாக்கள், விஸ்வரூபம், பாபநாசம் கொடுத்தார். 16 வயதினிலே கொடுத்த பாரதிராஜாதான் டிக் டிக் டிக் கொடுத்தார். நீங்கள் வெகுவாகப் பாராட்டும் மணிவண்ணன் நூறாவது நாள் கொடுக்கவில்லையா? நீங்கள் இயங்கும் சினிமாவில் க்ரைம் படங்கள் இந்த சமுதாயத்திற்கு அவசியமில்லை என்று எப்போதாவது சொல்லியிருக்கிறீர்களா? உங்கள் முதல் படமான பார்த்திபன் கனவு காதல் படம் என்று சொல்லிக் கொண்டாலும்..திருமணத்திற்குப் பிறகும் தான் நேசித்த தன்னை நேசிக்காத பெண்ணின் பின்னால் திரியும் கதாநாயகன் செய்வது கிரைம் வகையில் சேரும் சார். (stalking is a punishable crime under I.P.C section 354 D)

    பாக்கியராஜ்

    பாக்கியராஜ்

    உங்கள் பார்த்திபன் கனவு படத்தில் பாக்யராஜ் படம் பிடிக்கும் என்று சொல்லும் கதாநாயகியின் ரசனையை குறைந்ததாகக் கருதி நண்பர்களிடம் சிலாகிப்பான் அவன். (அதுவே தவறு). ஜெயகாந்தன் படிப்பவளை தன் ரசனைக்குப் பொருந்தியவளாக நினைப்பான். ஜெயகாந்தன் படிப்பதும், பாக்யராஜை ரசிப்பதும் அவரவர் ரசனை தொடர்பான விஷயம் சார். உங்கள் கதாநாயகனே படத்தின் இறுதிக் காட்சியில் தன் மனைவிக்குப் பிடித்த பாக்யராஜின் படத்திற்கு டிக்கெட் வாங்கி வந்திருப்பதாகக் காட்டி அவளின் ரசனையை அவன் புரிந்துகொண்டான் என்று சொல்லியிருப்பீர்கள்.

    அற்புத மனிதர்கள்

    அற்புத மனிதர்கள்

    நீங்கள் குறிப்பிடும் நான்கு வருடத்திற்கு ஒரு தடவை எழுதப்படும் புத்தகம் படிப்பவர்களில் மகா மட்டமான பேர்வழிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும். க்ரைம் நாவல்கள் விரும்பிப் படிப்பவர்களில் பல அற்புதமான மனிதர்களையும் காட்டமுடியும். உங்கள் சிவப்பதிகாரம் படத்தின் கிளைமாக்சில் வில்லனை உட்காரவைத்து நீதி போதனை நடத்தியிருக்கலாமே.. எதற்கு அத்தனை க்ரைம்? எனக் கேட்டுள்ளார்.

    ரசனையை தீர்மானிக்காதீர்கள்

    சினிமாவில் காட்ட முடியாத, சொல்ல முடியாத அரசியல் ஊழல்களுக்கு எதிரான பல கருத்துக்களும், வசனங்களும் க்ரைம் கதைகளில் சொல்லப் பட்டிருக்கிறது. சொல்லப்பட்டு வருகிறது. குடும்பம், சமூகம், காதல், சரித்திரம், நகைச்சுவை, போல க்ரைம் நாவல்களும் ஒரு வகை. ஒரு ரசனை.எந்த ஒரு படைப்பாளியின் ஒரு குறிப்பிட்ட படைப்பையும் தாராளமாக விமரிசியுங்கள். ஒரு குறிப்பிட்ட வகை படைப்புகளே அவசியமில்லை என்று சொல்வதில் அர்த்தமில்லை. எந்த வகை படைப்புகளைப் படிப்பது என்பது அவரவர் ரசனைக்கு ஏற்றது.அதை நீங்கள் தீர்மானிக்காதீர்கள். பக்குவமான சிந்தனாவாதியான உங்களிடமிருந்து மேம்போக்கான இந்தக் கருத்தை எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

    English summary
    Writer Pattukkottai Prabhakar criticized director Karu.Palaniyappan for his views on crime novel writers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X