ஒரு டிக்கெட்டை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய ரசிகர்.. பவன் கல்யாணின் ’ஓஜி’ அலப்பறை!
ஹைதராபாத்: பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓஜி' திரைப்படத்தின் முதல் டிக்கெட்டை ரசிகர் ஒருவர் 1 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. துணை முதல்வராக மாறிய நிலையிலும், தனது படங்களின் ஷூட்டிங்கை முடித்து ரிலீஸ் செய்து வரும் பவன் கல்யாண் படத்தின் டிக்கெட் விலைகளையும் அதிகரித்து வருவது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி வெளியான ஹரிஹர வீர மல்லு திரைப்படம் அய்யோ சாமி போதும் விட்ருங்கடா என ரசிகர்களை இம்சை செய்து வெளியே அனுப்பியது. ஏஐ தொழில்நுட்பமே சிஜி காட்சிகளை பிரமிப்பாக செய்து வரும் இன்றைய சூழலில் மோசமான அனிமேஷனில் ஓநாயுடன் எல்லாம் பவன் கல்யாண் பேசிய காட்சிகளும், பாறைகள் உருண்டு விழுந்த காட்சிகளும் படத்தை படுகுழியில் தள்ளின.

அந்த படத்தை பார்த்த பிறகும் அடுத்து பவன் கல்யாண் நடித்துள்ள ஓஜி படத்தை பார்க்க ஒரு லட்சம் ரூபாய்க்கு ரசிகர் ஒருவர் டிக்கெட் வாங்கியிருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
வட அமெரிக்காவில் வசூல் சாதனை: வட அமெரிக்காவில் வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது ஓஜி திரைப்படம். இத்திரைப்படத்திற்கான முன்பதிவு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலிருந்தே, படத்தின் டிக்கெட்டுகள் சாதனை அளவில் விற்பனையாகி வருகின்றன.
திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, இதன் வசூல் 2 மில்லியன் டாலர்களை நெருங்கியுள்ளது. 'ஆர்ஆர்ஆர்' போன்ற பிளாக்பஸ்டர் படங்களை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனமான டி.வி.வி. என்டர்டெயினர்ஸ் சார்பில், டி.வி.வி. தனையா இப்படத்தை தயாரிக்கிறார். 'சாஹோ' புகழ் சுஜித் இயக்கும் இத்திரைப்படம், ஒரு கேங்ஸ்டர் டிராமா படமாக உருவாகியுள்ளது. பிரபாஸின் சாஹோ படம் சறுக்கியது போல ஓஜி ரசிகர்களை சோதிக்காது என நம்புகின்றனர்.
பிரியங்கா மோகன் தான் ஹீரோயின்: தமிழில் பிரியங்கா மோகனுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில், தெலுங்கில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இந்த படமும் ரொம்ப காலமாக உருவாகி வந்தது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, 'ஓஜி' மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகிறார். நடிகர் அர்ஜுன் தாஸ், மூத்த நடிகர்களான பிரகாஷ் ராஜ், சுபலேகா சுதாகர், ஸ்ரேயா ரெட்டி, ஹரீஷ் உத்தமன், அபிமன்யு சிங், அஜய் கோஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

300 கோடி பட்ஜெட்: ரவி கே சந்திரன் ஒளிப்பதிவையும், நவீன் நூலி படத்தொகுப்பையும், தமன் எஸ் இசையையும் கவனிக்கின்றனர். இத்திரைப்படத்தின் பட்ஜெட், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம், தயாரிப்புச் செலவுகள் உள்ளிட்டவை சுமார் ₹250 கோடி முதல் ₹300 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு உரிமைகளுக்கான விற்பனை ₹80 கோடி அளவில் நடந்துள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் கனடாவில், 'ஓஜி' படத்திற்கான முன்பதிவு அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. 'கல்கி', 'புஷ்பா 2', 'தேவரா' போன்ற படங்களுக்கு இணையாக வசூல் ஈட்டும் என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கணிக்கின்றனர். அமெரிக்காவில் 'ஓஜி' திரைப்படத்தின் முன்பதிவிற்கு சிறப்பான பதில் கிடைத்துள்ளது.
சுமார் 470 திரையரங்குகளில், 2050 காட்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே அமெரிக்காவில் 62,000 டிக்கெட்டுகள் விற்பனையாகி, பிரீமியர் ஷோக்களுக்காக ₹16 கோடிக்கு மேல், அதாவது 1.8 மில்லியன் டாலர் வசூல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் ரூபாய்க்கு டிக்கெட்: இந்நிலையில், சித்தூரில் ஓஜி படத்துக்கான முதல் டிக்கெட்டை ரசிகர் ஒருவர் 1 லட்சம் ரூபாய் காசோலை கொடுத்து வாங்கியுள்ளார். இந்த தொகை தியேட்டர் நிர்வாகம் ஜனசேன கட்சியினருக்கு கொடுத்து, கிராம மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் எனக் கூறியுள்ளனர். சராசரியாக முதல் நாள் ப்ரீமியர் காட்சிக்கான டிக்கெட் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்துக் கொள்ளவும் ஆந்திரா அரசு தாராளம் காட்டியுள்ளது. ஹரி ஹர வீர மல்லு படம் போல இல்லாமல் ஓஜி படமாவது பெயருக்கு ஏற்ப ரசிகர்களை மகிழ்வித்தால் சந்தோஷம் தான்.


Click it and Unblock the Notifications











